துணைச் சாலையில் இடையூறு; தீயை அணைப்பதில் தாமதம்
கண்விழிப்புச் சேவைக்காக துணைச் சாலையில் ஒப்பந்ததாரர் கூடாரம் ஒன்றை எழுப்பியதால், ஹெண்டர்சன் ரோடு வாடகை வீட்டில் மூண்ட தீயை அணைக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்களுக்கு 18 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு தஞ்சோங் பகார் நகர மன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட தீச்சம்பவத்தின்போது தீயை அணைக்க போராடிய முழுநேர தேசிய சேவையாளர் எட்வர்ட் எச்.கோ, 19, உயிரிழந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த தஞ்சோங் பகார் நகர மன்றம், தீயை அணைக்கும் பகுதிகளில் கூடாரங்களை எழுப்புவது நகர மன்ற விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டது. புளோக்கின் வெற்றுத்தளத்தில் கண்விழிப்புச் சேவையை நடத்தவும் கூடாரத்தைக் கட்டவும் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
டிசம்பர் 7ஆம் தேதி மாலையில் அந்தக் கூடாரம் எழுப்பப்பட்டதாகவும் புளோக் 91 ஹெண்டர்சன் ரோடு வாடகை வீட்டில் டிசம்பர் 8ஆம் தேதி காலை தீ மூண்டதாகவும் நகர மன்றம் கூறியது.
"துணைச் சாலையில் பாதையை மறைக்கும் விதத்தில் கூடாரத்தை எழுப்பிய ஒப்பந்ததாரருக்கு நகர மன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது," என்ற நகர மன்றம், அதுகுறித்த மேல்விவரங்களைக் குறிப்பிட மறுத்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் முரளி பிள்ளை, பாட்டாளிக் கட்சியின் ஜெரால்ட் கியாம் நேற்று கேட்ட கேள்விகளுக்கு உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் பதிலளித்தார்.
துணைச் சாலையில் கூடாரம் எழுப்பப்பட்டதால், தீயை அணைப்பதற்குப் பாதையை வகுக்க, குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் அங்கிருந்த தடுப்புகளை அகற்ற வேண்டி இருந்ததாக அவர் சொன்னார்.
இதனால் 18 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய சேவையாளர் கோவின் மரணத்திற்கு காரணமான அம்சங்கள் குறித்து இப்போதைக்கு பேச இயலாது என்று சொன்ன டாக்டர் ஃபைஷால், அந்த வீரரின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.

