தீவு விரைவுச்சாலையில் மணிக்கு 137 கி.மீ.க்கும் 173 கி.மீ.க்கும் இடைப்பட்ட வேகத்தில் காரை ஓட்டிய ஆடவர்கள் எழுவருக்கு நேற்று அபராதமும் 15 முதல் 18 மாதங்கள் வரை வாகனம் ஓட்டத்தடையும் விதிக்கப்பட்டன. 30 கார்களுக்கும் மேற்பட்ட வாகனத் தொடரணியில் அவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கென்னத் ஃபூ யோங்லி, 32, லூயிஸ் லீ ரென் ஜுன், 26, ஓ ஜியா ஃபூ, 27, லின்கன் பே வெய் சியாங், 26, லிம் யூ ஷுன், 28, பிரையன் ஆன்டனி யாப், 25, இயன் கூ யி சியாங், 27, ஆகியோர் அந்த எழுவர்.
மோட்டார் வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் ஓட்டியதாக, அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் வேகமாக ஓட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, வாகனத் தொடரணியில் இடம்பெற்றிருந்த ஷான் சூங் ஸி ஹோங், 38, டேரல் ஆங் ஸி ஹாவ், 27, ஆகியோர் இன்று குற்றத்தை ஒப்புக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் காரை வேகமாக ஓட்டிய மற்றொருவரான ஜெஸ்மண்ட் டான் யோங் ஹாவ், 29, என்பவருக்கு கடந்த டிசம்பரில் 10 நாள் சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்ட ஈராண்டுத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
மற்ற கார்களை ஓட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
மிக வேகமாக கார் ஓட்டியதாக ஃபூ மீது 2014லும் அதே குற்றத்திற்காக லீ மீது 2019லும் குற்றம் நிரூபணமானது. ஃபூவும் லீயும் மீண்டும் குற்றம் புரிந்ததால், அவர்களுக்கு தலா $5,000 அபராதமும் அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவோ பெறவோ 18 மாதத் தடையும் விதிக்கப்பட்டது.
எஞ்சிய ஐந்து ஆடவர்களுக்கு தலா $3,000 அபராதமும் 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

