கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு, பயணிகள் கிராப் செயலியில் தனியார் வாடகை கார்கள் மற்றும் டாக்சிகளில் வாகனப் பகிர்வு சேவைக்கு (கிராப்ஷேர்) மீண்டும் முன்பதிவு செய்யலாம். 14 நாள் முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி 16 முதல் 29ஆம் தேதிவரை இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
ஒரே திசையில் செல்லும் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வகைசெய்யும் 'கிராப்ஷேர்' சேவை, எதிர்வரும் சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் மீண்டும் தொடங்கப்படுவதாக கிராப் நிறுவனம் நேற்று கூறியது.
'கிராப்ஷேர்' சேவையின் முன்னோட்டத்தின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளிலிருந்து மாலை 5 மணிக்கும் இரவு 11 மணிக்கும் இடைப்பட்ட உச்ச நேரங்களில் முன்பதிவு செய்யலாம். டௌன்டவுன், ரிவர் வேலி, ஊட்ரம், போன விஸ்தா உள்ளிட்டவை அந்தப் பகுதிகளில் அடங்கும்.
ஜனவரி 29ஆம் தேதிக்குப் பிறகு இச்சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், கிராப்ஷேர் சேவை எப்போது மீண்டும் முழுமையாகத் தொடங்கப்படும் என்பது குறித்த விவரங்களை கிராப் வழங்கவில்லை.
வழக்கமான தனியார் வாடகை கார், டாக்சி பயணங்களுடன் ஒப்பிடுகையில், கிராப்ஷேர் பயணங்களுக்கான கட்டணங்கள் 20 விழுக்காடு வரை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 டிசம்பரில் தொடங்கப்பட்ட கிராப்ஷேர் சேவை, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 பிப்ரவரி 9ஆம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
கிராப்ஷேர் பயணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, முன்பதிவை ரத்து செய்யும் பயணிகளுக்கு $4 கட்டணம் விதிக்கப்படும் என்று கிராப் தெரிவித்தது.

