கடல்துறைத் தொழில்களுக்கான வேலையிடப் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்தத் துறையில் வேலையிட மரணம் எதுவும் பதிவாகவில்லை. அதேநேரம் அந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஐந்து மரணங்கள் பதிவாயின.
இது சராசரியாக மாதத்திற்கு 0.6 மரணம் என்று கணக்கிடப்பட்டது.
ஆறு மாத காலத்திற்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறையை 2022 செப்டம்பர் 1ல் மனிதவள அமைச்சு கொண்டு வந்தது.
வேலை தொடர்பான மரணமடைந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அடுத்த மாதம் வரை தொடரும்.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடல்துறையில் கடுமையாகக் காயமடைந்தோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை பாதியாகக் குறைந்தது. முன்னதாக மாதம் 1.5 என்ற விகிதத்தில் இருந்த இந்த எண்ணிக்கை 0.7 என்று இறங்கியது.
இந்த விவரங்களை மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்டார்.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றமும் சிங்கப்பூர் கடல்துறை தொழிற்கூடங்களின் சங்கமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.
கடல்துறைத் தொழில்களுக்கான வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக முறை அமலாக்கம் தொடர்பான, திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை திரு ஸாக்கி இக்கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.
மரணம், காயம் தொடர்பான முன்னேற்ற எண்ணிக்கை, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக நிறுவனங்கள் கவனத்துடன் நடந்து கடப்பாட்டுடன் செயல்பட்டால் விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்பதை உணர்த்துகிறது," என்றார் அவர்.
நாடளாவிய சராசரி வேலையிட மரண எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாதம் 4.5 என இருந்தது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலப் பகுதியில் இது 2.5 என்று குறைந்ததாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
அதேநேரம் டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததைச் சுட்டிய அவர், ஊழியர்களை பாதுகாப்பாகவும் உடல்நலத்துடனும் வைத்திருக்கும் கடப்பாடு கட்டிக்காக்கப்பட வேண்டும் என்றார்.
நிறுவனங்கள் தங்களது வேலையிட பாதுகாப்பு, சுகாதார நிர்வாக முறைகளை தொடர்ந்து மேம்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
முறையான அபாயத் தடுப்பு நடவடிக்கை அமலாக்கம் மற்றும் பாதுகாப்பான வேலை நடைமுறை ஆகியவற்றுக்கான நிர்வாக முறைகளை அவர் அதற்கு உதாரணமாகச் சுட்டினார்.
மேலும், விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தங்களது ஊழியர்கள் தெரிந்திருப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருத்தி வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு நிறுவனங்களின் மேலிட நிர்வாகமும் ஊழியர்களும் பொறுப்பேற்க வலியுறுத்துகிறது.

