இணையம் வழியான தாக்குதல்களையும் துன்புறுத்தல்களை யும் எதிர்கொள்ளும் பெண்களுக்கும் சிறுமியருக்கும் ஆதரவளிக்க புதிய மையம் வாட்டர்லூ ஸ்திரீட்டில் திறக்கப் பட்டுள்ளது. இம்மாதம் 19ஆம் தேதிமுதல் அவர்கள் இம்மையத்தில் ஆதரவு நாடலாம்.
தொடக்கமாக, இந்த மையத்தில், பயிற்சிபெற்ற இரண்டு முழுநேர ஆலோசகர்கள் இருப்பார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட நேரங்களில் இவர்கள் உதவிக்குத் தயாராக இருப்பார்கள்.
'எஸ்ஜி ஹெர் எம்பவர்மண்ட்' என்னும் லாப நோக்கமற்ற அமைப்பின் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான யுவென் தியோ நேற்று ஒரு நிகழ்வில் இதனைத் தெரிவித்தார்.
புதிய மையம் தனது செயல்பாட்டைத் தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார். மையத்தின் சட்ட உதவி நிலையத்தில் கிட்டத்தட்ட 50 தொண்டூழிய வழக் கறிஞர்கள் சேவையாற்றுவார்கள். இவர்கள் இலவசச் சட்ட உதவி மையத்தையும் டிஎஸ்எம்பி சட்ட நிறுவனத்தையும் சேர்ந்தவர்கள்.
இணையத் துன்புறுத்தல்களைச் சமாளிக்கும் அமைப்பான 'சன்லைட் அலையன்ஸ் ஃபார் ஆக் ஷன்' கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.
இணையத் துன்புறுத்தல்களுக்கு, பெரும்பாலும் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே ஆளாவதாக ஆய்வு கண்டறிந்தது.
பாலியல் துன்புறுத்தல், அந்தரங்கப் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிடுதல் போன்றவை தொடர்பான இம்சைகளை இந்த வயதுப் பெண்கள் அனுபவித்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்களில் 61 விழுக்காட்டினர், எங்கு உதவி நாடுவது என்ற விவரம் தெரியாதவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

