சீனப் புத்தாண்டு: ரயில், பேருந்து சேவைகளின் நேரம் நீட்டிப்பு
சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளான ஜனவரி 21ஆம் தேதி குறிப்பிட்ட சில பேருந்து, ரயில் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்பட உள்ளது. கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சைனாடவுன் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு முழுமையாகத் திரும்பி உள்ளது. புத்தாண்டு 'கவுண்ட்-டவுன்' நிகழ்வு கிரேத்தா ஆயர் சதுக்கத்தில் ஜனவரி 21 இரவு 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் பொதுப் போக்கு வரத்தின் சில குறிப்பிட்ட சேவைகளின் நேரம் நீட்டிக்கப் படுகிறது. டெளன்டவுன், வடக்கு-கிழக்கு ஆகிய தடங்களின் ரயில் சேவைகள் அன்றைய தினம் இரண்டு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று கூறியது. எந்த சேவைகள் எந்த நேரம் வரை நீட்டிக்கப்படும் என்ற விவரங்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அமைச்சர்களின் சம்பளம் இந்த ஆண்டு மறுஆய்வு செய்யப்படலாம்
அமைச்சர்கள், இதர அரசியல் அலுவலர்களின் சம்பளம் குறித்த அடுத்தகட்ட மறுஆய்வு இந்த ஆண்டில் நடத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மறுஆய்வு குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் வெளி யிடப்படும் என்று அவர் தமது எழுத்துபூர்வமான பதிலில் குறிப்பிட்டார். தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைச்சர்கள் உள்ளிட்ட அரசி யல் நிர்வாகிகளின் சம்பளத்தை மறுஆய்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்று அவர் கேட்டிருந்தார். ஆகக் கடைசியாக 2017ஆம் ஆண்டு மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டதை திருவாட்டி புவா சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு சான், திறன்வாய்ந்த மற்றும் கடப்பாடு கொண்ட அரசாங்கத்திற்கான சம்பளம் மீதான 2012ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கை, சம்பள மறுஆய்வுக் கான சுயேச்சைக் குழுவுக்குப் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டார். அப்போது தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைவரான ஜெரார்ட் ஈ தலைமையில் அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, அதிபரின் சம்பளம் 51 விழுக்காடும் பிரதமரின் சம்பளம் 36 விழுக்காடும் குறைக்கப்பட்டன.

