ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ஸலோரா வாடிக்கையாளர்களின் கணக்குகளைத் திருடி மோசடி செய்ததாக நம்பப்படும் ஐந்து பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
மொத்தம் ஏழு வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடியாக 12,340 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை அவர்கள் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜோர்டான் சியா ஜி என், 21, லியோனார்ட் போர் ஜிங் சிங், 24, மார்கஸ் சுவா குய் ரோங், 26, காப்ரியல் கோர் சாவோ யாங், 28, பிரையன் டெங் ஜிங் யாவ், 33, ஆகிய நால்வரும் நேர்மைக்கு மாறான நோக்கத்துடன் பொருட்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
செவ்வாய்க் கிழமை தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இவர்களும் அடங்குவர். நவம்பர் 15 முதல் 24 வரை அதிக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போர், சுவா ஆகிய இருவரும் பல்வேறு ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் திருடியதாக நம்பப்படும் சிகரெட் பெட்டிகளைப் பெற்றுள்ளனர்.
கோ, $954 மதிப்புள்ள என்டியுசி மின் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். அதன் மூலம் அவர் சிகரெட்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
$280 மதிப்புள்ள என்டியுசி மின் பற்றுச்சீட்டுகள் உட்பட ஏழு சிகரெட் பெட்டிகளை டெங் பெற்று உள்ளார்.
$1,600 மதிப்புள்ள என்டியுசி மின் பற்றுச்சீட்டுகளைப் பெற்று சியா சிகரெட்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தவிர போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டிலும் இவர் சிக்கியுள்ளார். 2022 அக்டோபர் 4ஆம் தேதி அவரிடமிருந்து ஒரு பொட்டலம் கைப்பற்றப்பட்டது. அதில் கஞ்சா இருந்ததாக நம்பப்படுகிறது. ஐவரின் வழக்கு வரும் ஜனவரி 18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

