தைவானிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் தீ மூண்டதால் இருவர் பாதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பத்தில் கைபேசிக்கான கையடக்க மின்னூட்டி தீப்பற்றியதால் விமானம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
செவ்வாய் மாலை புறப்பட்டு அடுத்த நாள் காலை 12.20 மணிக்கு அந்த விமானம் சிங்கப்பூர் வருவதாக இருந்தது.
காயம் அடைந்த பயணிகளும் தொடர்ந்து அதே விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தனர் என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி சீன நாளி தழான லியான்ஹ சாவ்பாவ் தெரிவித்தது.
விமானம் புறப்படவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு 7.40 மணியளவில் விமான நிலைய அதிகாரிகள் தீ அணைப்பாளர்களை அனுப்பிவைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில் விமானத்தில் அடர்த்தியான புகை நிரம்பி யிருந்ததைக் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட இரு பயணி களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படாததால் அதே விமானத்தில் பயணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, விமானம் தரையில் இருந்தபோது ஒரு பயணியின் மின்னூட்டி சூடாகிவிட்டது என்று ஸ்கூட் தெரிவித்தது.
கைவிரல்களில் சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டதால் மின்னூட்டி சொந்தக்காரருக்கும் அவருடன் வந்தவருக்கும் தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டன என்றும் அது கூறியது.
"விமானம் புறப்படும் நேரத்தை மாற்றியிருக்கிறோம். பயணிகளுக்கு தற்காலிகமாக தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய பயணிகள், விமானச் சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்போம்," என்று ஸ்கூட் மேலும் தெரிவித்தது.

