பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பமாக ஆடவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காதலியின் கழுத்தில் இருந்த அடையாளம் 'காதல் கடி' என்று அவர் கூறியதையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
பதினொரு நாள்களாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த 2020 ஜூனில் அவரை உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இதற்கு எதிராக அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 2022ல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் மாற்றியது.
அந்த 45 வயது ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூவர் அடங்கிய அமர்வு நேற்று ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை எழுத்துபூர்வமாக விளக்கியது.
பெண்ணின் டீ சட்டை கிழிந்திருப்பது, 'பிரா' கொக்கிகளுக்கு ஏற்பட்ட சேதம், கழுத்தில் உள்ள காயம் ஆகியவை பெண்ணுக்கு எதிராக வன்முறை நடந்துள்ளதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கழுத்தில் ஏற்பட்ட காயம், காதல் கடியால் ஏற்பட்டது அல்ல என்றும் நீதிபதிகள் கூறினர்.
நீதிபதிகள் டே யோங் குவாங், ஜுடித் பிரகாஷ், வூ பி லி ஆகியோர் மூவர் அமர்வில் இடம்பெற்று இருந்தனர்.

