சிங்கப்பூரின் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய மிதிவண்டிப் பாதைகள் அமைத்துத் தரப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள மிதிவண்டிப் பாதை கட்டமைப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 530 கிலோமீட்டரிலிருந்து 1,300 கிலோமீட்டருக்கு உயர்த்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கேலாங், ஹவ்காங், காக்கி புக்கிட், மரின் பரேட், பொத்தோங் பாசிர், செங்காங், சிராங்கூன் ஆகிய வட்டாரங்களில் புதிதாக 55 கிலோமீட்டர் தூர மிதிவண்டிப் பாதைகளை அமைக்க ஏலக்
குத்தகைக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அமைக்கப்பட இருக்கும் இந்தப் புதிய மிதிவண்டிப் பாதைகள், பள்ளிகள் போன்ற முக்கிய வசதிகளுடன் குடியிருப்பாளர்களை இணைப்பதுடன் குடியிருப்புப் பேட்டைகளுக்கு இடையே மிதிவண்டிப் பாதை இணைப்பையும் மேம்படுத்தும் என்று ஆணையம் கூறியது.
மிதிவண்டி நிறுத்துமிடங்கள், மிதிவண்டிகள் சாலையில் கடந்து செல்வதற்கான வசதிகள், வரை
படங்களைக் கொண்ட பலகைகள் போன்ற கூடுதல் உள்கட்டமைப்புகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தையும் செங்காங் சிற்பப் பூங்காவையும் இணைக்கும் வகையில் செங்காங்கில் உள்ள தெம்பனிஸ் விரைவுச்சாலைக்குக் குறுக்கே புதிய மிதிவண்டி பாலத்தைக் கட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் மேலும் 3,000 மிதிவண்டி நிறுத்து மிடங்கள் அமைத்துத் தரப்படும் என்றும் ஆணையம் கூறியது. தற்போது சிங்கப்பூரெங்கும் 254,000 மிதிவண்டி நிறுத்துமிடங்கள் உள்ளன.
புதிய மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்படும் ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் ஏற்கெனவே இருக்கும் மிதிவண்டிப் பாதைகள் அகலப்படுத்துப்படும் என்று ஆணையம் கூறியது. இதன்மூலம் மிதிவண்டி ஓட்டவும் நடக்கவும் கூடுதல் இடம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஏழு குடியிருப்புப் பேட்டைகளும் முதிர்ச்சி அடைந்த வட்டாரங்கள் என்பதால் அங்குள்ள சில சாலைகள் மறுபயன்பாடு செய்யப்படும் என்று அறியப்படுகிறது. புதிய மிதிவண்டிப் பாதைகளை அமைக்க அங்குள்ள சாக்கடைகள், பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படும்.
இந்த மாற்றங்கள் சாத்தியமானவையா என்பதை உறுதி செய்ய மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக ஆணையம் கூறியது.
2030ஆம் ஆண்டுக்கான இலக்கு நிறைவேறியதும் பொதுக் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்பவர்களில் பத்தில் எட்டு பேர் தங்கள் வீட்டிலிருந்து சில நிமிடங்களில் மிதிவண்டிப் பாதையை அடைந்துவிடலாம்.
இதற்கிடையே, அங் மோ கியோ, பீஷான், மத்திய வர்த்தக வட்டாரம், தாமான் ஜூரோங், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் 30 கிலோமீட்டருக்கும் அதிகமான மிதிவண்டிப் பாதைக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாக ஆணைம் தெரிவித்தது.
மத்திய வர்த்தக வட்டாரத்தைத் தவிர்த்து, சிங்கப்பூரில் தற்போது பிடோக், சாங்கி-சீமெய், ஜூரோங் லேக் வட்டாரம், பாசிர் ரிஸ், பொங்கோல், செங்காங் உட்பட பத்து குடியிருப்புப் பேட்டைகளில் மிதிவண்டிப் பாதைகள் உள்ளன.
பீஷான், புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்
களிலும் கூடுதல் மிதிவண்டிப் பாதைகளுக்கான கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருப்
பதாக ஆணையம் கூறியது.
மிதிவண்டிப் பாதைகளை பாதுகாப்பான வகையில் பயன்
படுத்துவது தொடர்பாக கல்வி, விழிப்புணர்வு முயற்சிகள் தொடரப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.