சீனப் பூத்தாண்டில் சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாட்டுப் பயணம்
இம்மாதம் 22ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதாலும் நீண்ட வாரயிறுதி என்பதாலும் பலர் வெளிநாடு செல்கின்றனர் என்று உள்ளூர் பயண முகவைகள் தெரிவித்துள்ளன.
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சீனப் புத்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்திருப்பதாக சான் பிரதர்ஸ் பயண முகவை கூறியது.
ஐரோப்பா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்குப் பலர் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
துவாஸ் தீச்சம்பவம்: பாதுகாப்புச் சோதனை வலியுறுத்தப்படுகிறது
டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று துவாஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒருவர் மாண்டார், இன்னொருவருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், தீச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. தீச்சம்பவத்துக்கு 'எசிட்டிலின்' எரிவாயு காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயன்படுத்தப்பட்ட எரிவாயுத் தோம்புகளில் எரிவாயு மிச்சமிருந்ததாகவும் அதன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எளிதில் தீப்பிடித்துக்கொள்ளக்கூடிய எரிவாயுவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்புச் சோதனை நடத்த வேண்டும் என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
பியுபி: தீயணைப்புக் குழாய்கள் நன்றாக இயங்குகின்றன
இம்மாதம் 9ஆம் தேதியன்று ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் நான்கு தரை வீடுகள் தீயில் சேதமடைந்தன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தீயணைப்புக் குழாய்களை பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) கடந்த வெவ்வாய்க்கிழமையன்று சோதனையிட்டது. அவை நன்றாக இயங்குவதாக அது தெரிவித்தது.
தீச்சம்பவத்தின்போது அந்தத் தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்த தீயணைப்புப் படையினர் முற்பட்டபோது சிரமத்தை எதிர்கொண்டதாக இணையத்தில் கருத்துகள் வலம் வந்தன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தீயணைப்புக் குழாய்கள் சோதனையிடப்பட்டு அவை நன்கு இயங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சாலைகளில் துளையிட முடியாத டயர் கொண்ட வேன்
துளையிட முடியாத டயர்களைக் கொண்ட வேன் ஒன்று சிங்கப்பூர் சாலைகளில் முதல்முறையாகப் பயணம் செய்தது. தை செங் டிரைவில் உள்ள டிஎச்எல் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திலிருந்து பொத்தோங் பாசிருக்கு அந்த வேன் சென்றது.
இவ்வாண்டு இறுதிக்குள் இத்தகைய டயர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 50 வேன்களை டிஎச்எல் எக்ஸ்பிரஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.

