சைனா டவுன் வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் புத்தாண்டுச் சந்தையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
அங்கு கூடுவோரின் பாதுகாப்பை முன்னிட்டு சந்தைக்குச் செல்லும் வழிகள் மாற்றிவிடப்படக்கூடுமெனக் காவல்துறை கூறியது. பாதுகாப்பு அபாயம் ஏற்படக்கூடிய அளவை எட்டும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் யாரும் நுழைய முடியாத வகையில் அவை மூடப்படும்.
பொதுமக்கள் பொறுமையுடன் இருக்கும்படியும் அதிகாரிகளின் உத்தரவிற்கு ஏற்ப நடந்துகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்திற்குள்ளோ மூடப்பட்ட பகுதிகளுக்குள்ளோ வலிந்து நுழையவேண்டாமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் நாளை மறு நாள் வரையும் இம்மாதம் 20, 21ஆம் தேதிகளிலும் சைனா டவுன் பகுதிக்குச் செல்ல விரும்புவோர் 'கிரவ்ட்@சைனாடவுன்' எனும் இணைய வரைபடத்தின் மூலம் கூட்ட நெரிசல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம். அந்தந்த நாளின் மாலை ஆறு மணிமுதல் https://str.sg/wFgG எனும் இணைய முகவரியை நாடலாம்.
இனி வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை, டெம்பிள் ஸ்திரீட் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இம்மாதம் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரையும் இது நடப்பிலிருக்கும்.
கூட்ட நெரிசலில் பொதுமக்கள் தத்தம் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன் விழிப்புடன் இருக்கும்படி ஆலோசனை கூறியுள்ளது.

