கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் (கேஓஎம்) நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் ஆறு பேருக்கு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவர்கள் அறுவரும் பிரேசிலில் தங்கள் நிறுவனச் செயல்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு ஆலோசகர்களுக்குக் கையூட்டு தருவதற்கு கூட்டுச் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
பிரேசில் நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான பெட்ரோபிராஸ் நிறுவனத்துக்கு $73 மில்லியனை லஞ்சமாகத் தந்து அதற்கு ஈடாக தங்கள் நிறுவனத்துக்கு சில வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற அவர்கள் செயல்பட்டனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இது குற்றமாகும்.
அமெரிக்க நீதித்துறை, பிரேசில், சிங்கப்பூர் ஆகியவற்றின் விசாரணைக்குப் பிறகு, கேஓஎம் நிறுவனத்துக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்கீழ், கேஓஎம் நிறுவனம் 422 டாலர் அபராதத் தொகையைக் கட்டியதுடன் நிபந்தனைகள் அனைத்திற்கும் ஒப்புக்கொண்டது.
பல நாடுகள், அவற்றின் அதிகாரிகள் தொடர்புடைய இந்த சிக்கலான வழக்கில் முக்கிய சாட்சிகள் வெளிநாடுகளில் இருந்ததையும் அவர்களை சிங்கப்பூரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும்படி வலியுறுத்த இயலாது என்பதையும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு சுட்டியது.

