மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சகோதரர்களான இளையர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களின் வயது முறையே 17 மற்றும் 25.
போதைப்பொருள் விற்பனை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் இம்மாதம் 10ஆம் தேதி இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
இளையர்களிடமிருந்து $124,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக ஊடகமான டெலிகிராம் மூலம் இந்த போதைப்பொருள்களை விற்பது இவர்களின் திட்டமாக இருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் முதலில் 17 வயது இளையரை ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் கைது செய்தனர். அவரிடமிருந்த போதைப்பொருளைக் கைப்பற்றிய பின்னர் அதே வட்டாரத்தில் இருந்த வீட்டில் அவரது அண்ணனையும் கைது செய்தனர்.
டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது குறித்து அறிந்திருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது. இத்தகைய செயல்களை அணுக்கமாகக் கண்காணித்து, உரிய அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அது குறிப்பிட்டது.

