லெட்டன் கண்ணாடிகளைத் திரும்பப் பெறுகிறது இக்கியா நிறுவனம்
'லெட்டன்' வகை முகம் பார்க்கும் கண்ணாடிகளைச் சுவரில் பொருத்த உதவும் கருவிகள் சில இடங்களில் உடைந்ததால் எதிர்பாரா வகையில் கண்ணாடிகள் கீழே விழுந்ததாகக் கூறப்படுவதையடுத்து 'இக்கியா' நிறுவனம் கண்ணாடிகளைத் திரும்பப்பெறுகிறது. சிங்கப்பூரில் இத்தகைய சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றாலும் அக்கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டாமென அது அறிவுறுத்தியுள்ளது. கண்ணாடி தயாரிக்கப்பட்ட தேதியைக் குறிக்கும் நான்கு இலக்க எண் அதில் காணப்படும். எடுத்துக்காட்டாக, 2021ஆம் ஆண்டின் ஐந்தாம் வாரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தால் 2105 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுமுதல் அதற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளுக்குப் பதிலாக வேறு கண்ணாடிகளை மாற்றிக்கொள்ள இயலும்.
கைதிகளிடம் லஞ்சம் வாங்கிய பயிற்றுநருக்குச் சிறை, அபராதம்
கெல்வின் ஆங் வெய் ஷெங் எனும் 40 வயது ஆடவர், சாங்கி சிறைச்சாலையில் கைதிகளுக்கு ரொட்டி வகைகளைத் தயாரிக்கக் கற்றுத்தரும் பயிற்சிக்கூடத்தின் மேற்பார்வையாளர். நான்கு கைதிகளிடமிருந்து மொத்தம் $1,200 லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அனுமதிக்கப்படாத தூக்க மாத்திரைகளை அவர் அவர்களுக்கு ரகசியமாகத் தந்தார். இதன் தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து ஆங்கிற்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையும் $1,200 அபராதமும் விதிக்கப்பட்டன. தண்டனை விதிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். தான் செய்வது தவறு என்று தெரிந்தே ஆங் செயல்பட்டதை அவர் சுட்டினார்.
சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட இளையருக்கு சீர்திருத்தப் பயிற்சி
மது அருந்திய நிலையிலிருந்த 14 வயதுச் சிறுமியுடன் தான் பாலியல் உறவு கொண்டதை சமூக ஊடகத்தில் ஒப்புக்கொண்ட 19 வயது இளையருக்குக் குறைந்தது ஆறு மாத சீர்திருத்தப் பயிற்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாம் அப்போது தேசிய சேவையாளராக இருந்ததையும் சென்ற ஆண்டு நவம்பரில் அவர் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் அவர் மீது வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுடன், திருட்டு, ஏமாற்று, உரிமமின்றி வாகனமோட்டியது ஆகியவை தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. அனைத்தையும் அவ்விளையர் ஒப்புக்கொண்டார்.

