பிரமிக்கவைத்த சிங்கப்பூரர்களின் தாராளம்

வி.கே. சந்தோ‌‌ஷ் குமார் 

திரு ராகுல் சிங் ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க 2005-ல் அவருக்குக் கிடைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நெப்டியூன் ஓரியன்ட் லைன்ஸ் கல்வி உபகாரச் சம்பளம் உண்மையாகவே ஒரு வரமாக அமைந்தது. 

“அதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை,” என்று தப்லா! இதழிடம் அவர் சொன்னார்.

“என் வசதிக்கு அப்பாற்பட்ட உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அந்த உபகாரச் சம்பளம் உறுதுணையாக இருந்தது. அது எனக்கு கிடைக்காதிருந்தால், என் வாழ்க்கையில் நடந்த பலவும் நடந்திருக்கமாட்டா.” 

இந்தியாவின் அயோத்தி நகரைச் சேர்ந்த திரு ராகுல், உத்திரப் பிரதேச மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க லக்னாவ் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். துருதுருப்பான அந்தப் பதின்ம வயது இளைஞரே அவரது குடும்பத்தினரில் விமானத்தில் ஏறிய அல்லது வெளிநாட்டுக்குச் சென்ற முதலாமவர். 

திரு ராகுல் சிங்கப்பூரில் தரையிறங்கிய போது, அவரிடம் வெறும் $200 மட்டும்தான் இருந்தது. உடனடியான தேவைகளுக்குச் செலவு செய்யவோ அல்லது குடும்பத்தாரை அழைப்பதற்குக் கைப்பேசி வாங்கவோ அது போதாது. 

“தொலைபேசி சேவைகள் பற்றி நான் விசாரித்தபோது, அடிப்படை சேவை ஒப்பந்தத்திற்குக் குறைந்தது $200 முன்பணம் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். உபகாரச் சம்பளப் பணம் இன்னும் கிடைக்காததால் என்னிடம் போதிய பணம் இல்லை,” என்றார் அவர்.

“உயிரியல் வகுப்பில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சிங்கப்பூர்ப் பெண்ணிடம் அதுபற்றி சொன்னேன். அவர் உடனடியாக எனக்கு உதவ முன்வந்தார். 

“’அப்படியா, என் பெயரில் பதிவு செய்து தருகிறேன். கட்டணத்தை நீங்கள் மாதந்தோறும் கட்டிவிடுங்கள்’ என்று அந்தப் பெண் சொன்னார். அவருக்கு என்னை ஒரு வாரம்தான் தெரியும். அப்படியிருந்தும் அவர் காட்டிய அன்பு என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.” 

நான்காம் தலைமுறை சிங்கப்பூரரான அந்தப் பெண்ணின் பெயர் காயத்ரி போஸ். தற்போது மூத்த நிர்வாகியாகப் பணிபுரியும் அவர், வெளிநாட்டு மாணவர்களுக்குத் தொலைதூரத்தில் வாழப் பழகிக்கொள்வது பெரும்பாலும் சிரமமாக இருக்கும் என்பதாலும், இந்தியாவில் உள்ள பெற்றோருடனும் உறவினர்களுடனும் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்பதாலும் திரு ராகுலுக்கு உதவ விரும்பியதாக தப்லா! இதழிடம் கூறினார். 

“வகுப்பு முடிந்த பிறகு அவரை நான் ஜூரோங் பாயின்ட் கடைத்தொகுதிக்கு அழைத்துச் சென்று, ஸ்டார்ஹப் தொலைபேசி சேவைக்குப் பதிவு செய்ய உதவினேன்,” என்றார் அவர். 

“அதோடு, இந்தியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் லிட்டில் இந்தியா வட்டாரத்தைப் பற்றியும் அவரிடம் சொன்னேன். அதைக் கேட்டு ராகுல் உற்சாகமடைந்தார்.”

முதல் பாடத் தவணையின்போது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் இரண்டு மணிக்கு விரிவுரைகள் முடிவடைந்த பிறகு, திரு ராகுல் தவறாமல் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வார். அங்கு அவருக்கு மிகவும் பிடித்த இடம் முஸ்தபா சென்டர். இந்திய மலாசா மேகி முதல் ஹமாம் சவர்க்காரம் வரை அவர் விருப்பப்பட்ட அனைத்தும் அங்கு அவருக்குக் கிடைத்தன. 

இதுதான் சிங்கப்பூரில் அவரது ஆரம்பகால வாழ்க்கை. மறு ஆண்டு, ஹாங்காங், மக்காவ், சீனாவில் தலைமைத்துவ, கல்வி நாட்டத் திட்டத்தில் (LEAP) பங்குபெற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அவரைத் தேர்ந்தெடுத்தது. 

“நான் ஓராண்டு காலம் சிங்கப்பூரில் வாழ்ந்திருந்தபோதும், கடலுக்குச் சென்றதே இல்லை. ஓய்வு நேரம் முழுவதும் மின்ம இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தில் சோதனைகள் செய்து கொண்டிருந்தேன்,” என்றார் திரு ராகுல். 

“நான் ஹாங்காங்கை அடைந்தபோதுதான், என் வாழ்க்கையில் முதல்முறையாகக் கடலில் அடியெடுத்து வைத்தேன். அதுவரை நான் இந்திய உணவைத் தவிர வேறு எதையும் சாப்பிட்டதில்லை. அந்தப் பயணத்தின்போதுதான், பல்கலைக்கழகத்தின் மின்சார, மின்னணுப் பொறியியல் துறையின் அப்போதைய தலைவர் ஹெண்ட்ரி ஜாங், சாப்ஸ்டிக்ஸ் எனும் பிடிகுச்சிகளைப் பயன்படுத்த எனக்குக் கற்றுக் கொடுத்தார்.” 

விரைவில் சீன, பெரனக்கான், மலாய் உணவு வகைகளை ருசித்து சாப்பிடத் தொடங்கி விட்டார் திரு ராகுல். குறிப்பாக, போப்பியா, லக்சாவுடன் “குளுகுளு பண்டுங் பானம்” அவருக்கு மிகவும் பிடிக்கும். உணவு நிலையங்களில் கிடைக்கும் பலவிதமான உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டார். 

தற்போது EdTech நிறுவனராக இருக்கும் திரு ஹெண்ட்ரி, மற்ற கலாசாரங்களின் சீரிய நடைமுறைகளை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை திரு ராகுலுக்கு இருந்ததாகச் சொன்னார். 

“கடின உழைப்பாளியான அவர், வகுப்பறைக்கு அப்பாற்பட்ட வி‌ஷயங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்,” என்றார் திரு ஹெண்ட்ரி. 

“அவருக்கு சுயச் சிந்தனை இருந்ததை நான் கண்டேன். தன்னால் முடிந்தவரை அதிகமான பாடங்களைக் கற்பதில் அவர் திடமாக இருந்தார்.”

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கமாக ஒவ்வொரு பாடத் தவணைக்கும் ஐந்து அல்லது ஆறு பாடங்கள் கற்பார்கள். திரு ராகுல் பல்வேறு துறைகளில் பத்து பாடங்கள் படிப்பார். ஒவ்வொரு தவணையும் “அளவுக்கதிக பாடங்கள்” படிப்பதற்கு அனுமதி பெறுவார். 

திரு ராகுல் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபோது, பொறியியல் துறையில் ஹானர்ஸ் பட்டத்துடன், இயற்பியல், பொருளியல் துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதோடு, மாணவப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் சென்றிருந்த மற்ற பல்கலைக்கழகங்களிலும் கல்விக் கழகங்களிலும் சான்றுகளும் பெற்றிருந்தார். 

“என் பல்கலைக்கழகத்தை ‘முடிந்ததை எல்லாம் உண்ணும்’ புஃபே போல நடத்தினேன்,” என்றார் திரு ராகுல். 
நான் எஸ்எம்யு (சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்), பிஎஸ்ஐ (பால் ‌ஷெரர் கல்விக்கழகம்) ஆகியவற்றின் புஃபே-க்கும் சென்று நுண் ஒளியணுவியல், சட்டம் போன்ற பாடங்களையும் ‘விழுங்கினேன்’.” 

திரு ராகுல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, மாணவர் சங்கத் தலைவர் ‌ஷடாப் டயாபி அவருக்கு அறிமுகமானார். தற்போது சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்பச் சங்கத்தின் தலைவராக இருக்கும் திரு டயாபி, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது என்று அவரிடம் கூறினார். 

“பல்கலைக்கழகம் முழுநிறைவான மேம்பாட்டுக்குரியது என்று அவரிடம் சொன்னேன். புறப்பாட நடவடிக்கைகளில் பங்கெடுத்து, ஆய்வுத் திட்டப்பணிகளை மேற்கொள்ளும்படி அவரிடம் சொன்னேன்,” என்று சிங்கப்பூரரான திரு டயாபி, தப்லா! இதழிடம் தெரிவித்தார். 

இந்த அறிவுரையைப் பின்பற்றி, பல்வேறு மன்றங்களில் பதவிப் பொறுப்புகளை ஏற்றார் திரு ராகுல். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் சங்கம், AIESEC (இளைஞர்களுக்குத் தலைமைத்துவ அனுபவம் வழங்கும் அரசாங்கச் சார்பற்ற அனைத்துலக அமைப்பு), மின்சார, மின்னணுப் பொறியாளர்கள் கழகம், வானியல் சங்கம், மாணவர் தொழில்நுட்ப முனைப்பு போன்றவை அவற்றுள் அடங்கும். 

“எனது உலகக் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திக்க ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த மன்றங்கள் பெரிதும் துணை புரிந்தன,” என்றார் திரு ராகுல். “பல்வேறு கலாசாரங்களை ஆராய்வது எனக்கு உண்மையாகவே மகிழ்ச்சி தந்தது. சொல்லப்போனால், இந்தியர் அல்லாத நண்பர்களே எனக்கு அதிகமாக இருந்தனர்.”

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் தனது மனைவி கெலினா கொகுட்டை திரு ராகுல் சந்தித்தார்.

உக்ரேனியரான அவரது மனைவி, தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி ஆய்வாளராகவும், சிங்கப்பூரில் உள்ள உக்ரேனிய மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார். 

“சிங்கப்பூர் வாழ்க்கையை நான் நேசித்தேன்,” என்றார் திரு ராகுல். “நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கிடைத்த கல்வியால், படிப்பை முடிப்பதற்கு ஒன்பது மாதத்திற்கு முன்பிருந்தே எனக்குப் பல வேலைகள் வழங்கப்பட்டன. என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கைத்தொழில் என்னையறியும் ஒரு பயணமாக சிங்கப்பூரில் தொடங்கியது.”

அறிமுறை இயற்பியலாளராக விரும்பி, தற்செயலாகப் பொருளியல் துறையின்பால் ஈர்க்கப்பட்டு, முதலீட்டு வங்கியில் நிர்வாகப் பயிற்சியாளராக வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார் திரு ராகுல். பிற்பாடு, நிதியீட்டுத் தரகுத்துறைக்கு மாறிச்சென்றார். 

மூன்று ஆண்டுகள் வேலை செய்த பிறகு, பெங்களூரின் இந்திய நிர்வாகக் கல்விக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்தார். அதன்பிறகு, வங்கித் துறையில் தொடர்ந்து வேலை செய்தார். அப்போதுதான் தனது எழுத்தார்வத்தை அவர் உணர்ந்தார். 

இன்று அவர் ஓர் எழுத்தாளராக மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றின் விற்பனை ஆதாயத்தில் ஒரு பகுதியை அறப்பணிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அதுமட்டுமன்றி, ஒரு பேச்சாளராகப் பற்பல தொடக்கநிலை நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், குளோபல் இந்திய அனைத்துலகப் பள்ளி, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் உரிமம் பெற்ற கணக்காய்வாளர்கள் கழகம் போன்ற கல்விக் கழகங்கள் ஆகியவற்றில் தனது அறிவாற்றலையும் பகிர்ந்து கொள்கிறார். 

பருவநிலை மாற்றம், மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மத்தியில் இருபத்தோராம் நூற்றாண்டின் வாழ்க்கைத்தொழில்கள் பற்றிய பயிலரங்குகளையும் அவர் நடத்துகிறார். 

அதோடு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உதவி இயக்குநராக “இந்தியா கனெக்ட்” திட்டத்தை மேற்பார்வையிடுகிறார். இத்திட்டம், திறன்மிக்க இந்திய மாணவர்களுக்கு முழு நிதியுடன் ஆய்வு வாய்ப்புகளை வழங்குகிறது. 

“கல்வி ஒரு சிறந்த சமநிலைக் கருவி என்று நான் நம்புகிறேன்,” என்று திரு ராகுல் கூறினார். “ஏழைகளுக்கு இடையிலும் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் இடையிலும் உள்ள இடைவெளியைக் கல்வியால் அகற்ற முடியும்.” 

“ஆனால், முன்பைவிட இப்போது மக்களுக்கு அதிகமான பட்டங்கள் கிடைத்தாலும், பட்டம் பெற்ற பிறகு தங்களது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது பற்றி அவர்கள் இன்னமும் அறியாதிருக்கிறார்கள். 

“இதை மனதில் கொண்டு, மாணவர்களுக்கும் இளம் பட்டத்தொழிலர்களுக்கும் வாழ்க்கைத்தொழில், சம்பளம், மகிழ்ச்சி பற்றிய பயிலரங்குகளை நடத்தத் தொடங்கினேன். 

“ஜப்பானிய இக்கிகாய், இந்திய ஸ்வதர்மா போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தி, மக்கள் தங்களது நோக்கத்தைக் கண்டறியவும் நிறைவான வாழ்க்கை வாழவும் உதவினேன்.” 

திரு ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியேற வாய்ப்புகள் இருந்தன. “என் சகோதரி ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார். என் மனைவி உக்ரேனியர். நான் அமெரிக்கா, யூகே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை செய்திருக்கிறேன்,” என அவர் விவரித்தார். 

“எங்கே குடியேறலாம் என நான் யோசித்த போதெல்லாம், சிங்கப்பூரே உச்சத்தில் இருந்தது. அதற்குக் காரணம் சிங்கப்பூரின் உலகத் தரமிக்க உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, குறைவான குற்றச்செயல்கள், குறைவான வேலையின்மை விகிதம், ஏராளமான நல்ல வேலைகள், குறைவான வரிகள், உலகத் தரமிக்கக் கல்வி, திறமைக்கு அங்கீகாரமளிக்கும் சமுதாயம். 

“கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த பிறகு, இதையே எங்கள் இல்லமாக்கிக்கொள்ள கெலினாவும் நானும் உறுதியாக முடிவெடுத்தோம். எங்களது ஒன்பது வயது மகனுடன், 2019-ல் நாங்கள் குடியுரிமை பெற்றோம்.”

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!