படித்து பட்டம் பெற்றதும் முழுநேர நிரந்தர வேலைகளைப் பெற்ற பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களின் விகிதம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் 59% ஆக அதிகரித்து உள்ளது.
இந்த விகிதம், 2021ல் 58.2% ஆகவும் 2020ல் 52% ஆகவும் இருந்தது. கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த வேலை நியமன புள்ளிவிவரங்கள் பழையபடி இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.
தேசிய சேவையை முடித்து வெளிவரும் புதிய பட்டதாரிகளில் 10 பேரில் ஒன்பது பேருக்கும் அதிகமானவர்கள் அதாவது 91.8 விழுக்காட்டினர் வேலையில் அமர்ந்துவிட்டனர் என்பது 2022 பலதுறை தொழில் கல்லூரி பட்டதாரி வேலை நியமன ஆய்வு மூலம் தெரியவருகிறது.
இந்த விகிதம் 2021ல் 92.2% ஆக இருந்தது. 2020ல் 87.4% ஆக இருந்தது.
சிங்கப்பூரின் ஐந்து பலதுறை தொழிற்கல்லூரிகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பட்டதாரிகளின் சம்பளமும் அதிகரித்து இருக்கின்றன.
எட்டு துறைகளைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவர்களின் தொடக்கச் சம்பளம் கூடி இருக்கிறது.
சுகாதார அறிவியல் துறை பட்டதாரிகளின் சம்பளம்தான் மூன்றாண்டு காலத்தில் ஆக அதிகமாகக் கூடியது. அவர்களின் ஊதியம் 2021ல் $2,650 ஆக இருந்தது. அது 2022ல் $2,854 ஆக அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

