புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் லெண்டோர் அவென்யூவுக்கு முன்னதாக நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அந்த விபத்து பற்றி அதிகாலை 3.08 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய காரை 22 வயது மாது ஓட்டிச் சென்றார். அந்த காரில் 24 வயதும் 27 வயதும் உள்ள ஆடவர்கள் இருவர் இருந்தனர்.
அந்த மூவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர்.
இதனிடையே, நிலப் போக்கு வரத்து ஆணையம் டுவிட்டர் சமூக ஊடக இணையத்தளத்தில் அந்த விபத்து பற்றி தெரிவித்தது. அந்தச் சாலையின் 3, 4, 5ஆம் தடங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி அதிகாலை 3.28 மணிக்கு வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோசனை கூறியது.
பிறகு காலை 7.10 மணிக்கு மற்றொரு செய்தியை அது வெளியிட்டது. தெம்பனிஸ் விரைவுச்சாலை வெளியேறும் வழி வரை போக்குவரத்து தேக்கம் இருப்பதாக அது கூறியது.
ஆகையால், 4, 5ஆம் தடங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி அது ஒட்டுநர்களுக்கு ஆலோசனை கூறியது.
போக்குவரத்துத் தேக்கம் நேற்றுக் காலை 9 மணி வரை அகலவில்லை. போக்குவரத்து மெதுவாக இருந்ததாக காலை 9.30 மணிக்கு டெலிகிராமில் தகவல்கள் வெளியாயின.
இதனிடையே, காரில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்பு சாதனத்தைப் பயன்படுத்தி மீட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
விபத்து பற்றி காவல்துறை புலன்விசாரணை நடத்தி வருகிறது.

