கேலாங்கில் பட்டப்பகலில் பாலியல் வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை விற்றுக்கொண்டிருந்த சிலர், காவல்துறையினரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களைத் துரத்திப் பிடித்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் எடையுள்ள பாலியல் வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளைக் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு $3,000க்கு மேல் இருக்கும்.
இதன் தொடர்பில், மூவர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சுகாதாரப் பொருள்கள் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
டிசம்பர் 28ஆம் தேதி முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 80க்கு மேற்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 309 ஆடவர்களும் 157 பெண்களும் விசாரணை வளையத்தில் உள்ளனர். அவர்கள் 15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
காவல்துறையின் பல்வேறு நிலப் பிரிவுகளிலிருந்து 640க்கு மேற்பட்ட அதிகாரிகள் இந்த இருவார நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 1,500க்கு மேற்பட்டவர்களிடம் சோதனை நடத்தினர். அவர்களில் 152 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல் துறை, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சோதனையை நடத்தினர். இந்நடவடிக்கையைப் பார்வையிட ஊடகத்தினரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல் அதிகாரிகளால் பிடிபடவிருக்கும் தருணத்தில், குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் அந்த மூவர், சட்டவிரோதமான மருந்துகளை அல்ஜுனிட் சாலை, கேலாங் சாலைச் சந்திப்பில் வீசியவாறு தப்பி ஓடினர்.
பிடிபட்ட பின், மூவரும் நியூ கேத்தே விடுதிக்கு முன் இருக்கும் சுவருக்கு எதிரே அமர்த்தப்பட்டனர். பெயர் குறிப்பிட மறுத்த அக்கம்பக்க வர்த்தக உரிமையாளர் ஒருவர், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் தன்னுடைய வர்த்தகத்தை பெரிதும் பாதிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
"சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை காவல்துறை கடுமையாக கையாளும். இது, இவ்வாண்டு அனைத்து அமைப்புகளும் சம்பந்தப்பட்ட முதல் சோதனையாகும்," என்றார் பிடோக் காவல்துறை தலைமையகத்தின் தலைவரான உதவி ஆணையர் ஜஸ்டின் வோங்.

