தைத் திருநாள் வியாபாரத்தை வரவேற்று காத்திருக்கும் கடைகள்

தைத் திருநாள் வியாபாரத்தை வரவேற்று காத்திருக்கும் கடைகள்

2 mins read
c251bc94-35d6-4a4e-bb1b-fd0dd194b478
-

பொன்மணி உதயகுமார்

தைத் திருநாளை முன்னிட்டு லிட்டில் இந்தியா கடைகள் பொங்கல் விழாவுக்கு தேவையான பொருள்களை வாங்கி குவித்துள்ளன. கரும்பு, இஞ்சி, மஞ்சள், தேங்காய், வழிபாட்டுக்கு தேவையான பொருள்கள், மண்பானைகள், மலர்கள் போன்றவற்றை மக்கள் வாங்க தொடங்கியுள்ளனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று முடிந்துள்ள வேளையில் வியாபாரம் பெருகும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அது குறைந்துள்ளது என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர். வியாபாரமும் மக்கள் நடமாட்டமும் இன்று அதிகரிக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

வழக்கம்போல இந்தியாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் கரும்பு இவ்வாண்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மலேசிய கரும்பைக் காட்டிலும் இந்திய கரும்பு இனிப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்திய கரும்பை விரும்புவர் என்று பல ஆண்டுகளாக கரும்பு விற்கும் ஜோதி புஷ்பக் கடை ஊழியர் திரு சுரேந்தர், 33, கூறினார். இவர் கூறியதற்கு ஏற்ப தேக்கா எங்கிலும் இந்திய கரும்புகள் நடைபாதைகளை அலங்கரித்தன.

பல கடைகள் இன்றைய கூட்டத்தை எண்ணி நேற்று வரை பொருள்களை இறக்கி அடுக்கிக் கொண்டு இருந்தன. பல கடைகளில் நேற்றே கூட்டம் அலைமோத தொடங்கி, அமர நேரமில்லாமல் கடைக்காரர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

பொங்கல் விழா கூட்டத்தை எதிர்பார்த்து தேவையான சரக்குகளை இறக்குமதி செய்துள்ள திரு ரமேஷ், 42, இவ்வாண்டு மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதற்கு விநியோகம் அதிகரித்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். இருப்பினும் மற்றவர்களைபோல இவரும் இன்று வியாபாரம் சூடுபிடிக்கும் என்று நம்புகிறார்.

பலசரக்கு கடைகளைப் போல தேக்காவின் பூக்கடைகளும் பரபரப்பாக வியாபாரத்தைத் தொடங்கிவிட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு நேற்று கூட்டம் இல்லை என்றார் பூமாலை கட்டும் திரு செந்தில், 35. இவ்வாண்டின் புத்தாண்டு வியாபாரம்கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றார் மற்றொரு பூக்கடையின் திரு பிரபு, 30. இந்த நிலை மாறி இன்று வியாபாரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் வியாழக்கிழமை முதல் மலர்களை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளன பூக்கடைகள்.

இவ்வாண்டு கடைகளில் மட்டுமல்லாமல், கிளைவ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்னேஷ் பால் பண்ணையின் கால்நடைகளைப் பார்க்கக்கூட கடந்த ஆண்டு அளவுக்கு கூட்டம் வரவில்லை என்றார் அதன் உரிமையாளர் திரு விக்னேஷ், 23. வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூரர்களும் வரவேண்டும் என்பது இவரது விருப்பம்.