அத்தியாவசிய, அவசர தேவைக்கு 995

அத்தியாவசிய, அவசர தேவைக்கு 995

4 mins read
8d9f42d9-9178-43d3-9467-e73e97a2232c
-

விளம்பரச் செய்தி

எந்த ஒரு நேரத்திலும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் செயல்பாட்டு மையத்தில் தாதியர்கள் உள்பட 35 முதல் 40 அதிகாரிகள் இருப்பார்கள். அதுபோன்ற நான்கு குழுக்கள் என மொத்தம் 160 பேர் இந்த 12 மணி நேரப் பணியை, 24 மணி நேரமும் மேற்கொள்கின்றனர். அழைப்புகள் வரும்போது தொடர்புகொண்டோருடன் பேசுவது, வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்புவது, மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். 2022ஆம் ஆண்டில் இந்த மையத்திற்கு வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 380,000. அப்படியென்றால், நாளுக்கு 1,000 அழைப்புகளுக்கும் மேல் என்று கணக்கிடப்படுகிறது. அவற்றில் மூன்றில் இரண்டு அழைப்புகள் மருத்துவ அவசரத்திற்காக வருகின்றன. நோய் வாய்ப்பட்டோர், மரணம் ஏற்படுத்தக்கூடிய காயம், உடனடியாகப் பார்க்காவிட்டால் மிகுந்த பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய சூழல்கள், மாரடைப்பு போன்ற காரணங்கள் அந்த மருத்துவ அழைப்புகளில் அடங்கும்.

இருப்பினும் மருத்துவ தேவைகளுக்கான அழைப்புகளில் கிட்டத்தட்ட ஏழு விழுக்காட்டு அழைப்புகள் அவசரம் அல்லாத காரணங்களுக்காக வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 236,681 மருத்துவ அவசர அழைப்புகள் வந்திருந்த பட்சத்தில் அவற்றில் 10,673 அழைப்புகள் அவசரம் அல்லாதவை. மேலும் 5,544 அழைப்புகள் வீணான பீதியால் வந்த தேவையற்ற அழைப்புகள். கடந்த 22 ஆண்டுகளாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் பணிபுரிந்துவரும் இரண்டாம் வாரண்ட் அதிகாரி பர்மிந்தர் கோர் கில், 995 அழைப்புகள் வந்தவுடன் என்ன நடக்கும் என்பதை பகிர்கிறார்.

அவசரக் காலத்தில், உதவி நம்மை வந்தடைவதை உறுதிசெய்வதில் ஒன்று, பொருத்தமான நேரத்தில் மட்டுமே தேவையான வளங்களைப் பயன்படுத்துவது.

முக்கியமாக, விபத்து, ஆபத்து, அத்தியாவசிய தருணங்கள், அதாவது உதாரணத்திற்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நேரங்கள், தீச் சம்பவங்கள் போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே 995 எண்ணில் தொடர்புகொண்டு உதவி நாடுவது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரை 995 அவசர எண் வழியே தொடர்புகொள்வதின் மூலம், தீயணைப்பு மற்றும், அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம்.

பர்மிந்தர் தற்போது 995 அவசரத் தொடர்பு அழைப்புகளைப் பெற்று அதற்கான தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் பணியில் இருக்கிறார்.

படையின் தலைமையகத்திலுள்ள நடவடிக்கை மையத்தில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது.

மூத்த அவசர நடவடிக்கைகள் நிபுணரான அவர், பாராமெடிக் எனும் அவசர மருத்துவ வண்டியில், சுகாதாரப் பராமரிப்புப் பணியை மேற்கொள்வதையே தொடக்கத்தில் செய்துவந்தார்.

995 அழைப்பு வந்ததும்

நடப்பது என்ன?

அழைப்புகள் இணைக்கப்பட்ட பின், பர்மிந்தர் அழைப்புக்கான காரணத்தைக் கேட்டறிவார். பெயர், தொடர்பு எண், முகவரி, அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை பர்மிந்தர் கேட்டறிந்து, தொழில்நுட்பத் தளத்தில் உள்ளீடுவார்.

சம்பவம் குறித்த கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும் அதே நேரத்தில் அவசரத்தின் நிலைமை அறிந்து அவர், அதற்குத் தேவையான வேலைகளை தொழில்நுட்ப வழிமுறைகளின் உதவியுடன் செய்துவருவார்.

"சிலரோ நாங்கள் அதிகம் கேள்விகள் கேட்பதாக நினைக்கக் கூடும். ஆனால் தக்க உதவியை நாங்கள் வழங்க அத்தகைய தகவல்கள் அத்தியாவசியமானவை," என்றார் பர்மிந்தர்.

"அழைப்பு இணைக்கப்பட்டதிலிருந்து சிறிது நேரத்தில் உதவி அவர்களை நாடி வரும் என்று அனைவரும் நம்பிக்கை கொள்ளலாம்," என்றும் அவர் சொன்னார்.

சம்பவம் நடந்த இடத்தைக் குறிப்பிட்டு அடையாளப் படுத்துவது மிகவும் முக்கியம். அப்போதுதான் சரியான இடத்திற்கு விரைவாக அவசர நிலை வாகனங்கள் வந்தடைய ஏதுவாக இருக்கும்.

மருத்துவச் சம்பவமாக இருப்பின், நோயாளியின் வயது, பாலினம் போன்ற கேள்விகளும் கேட்கப்படும்.

மேலும், நோயாளிக்கு முதலுதவி வழங்குவதற்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பர்மிந்தர், அழைப்பாளருடன் என்ன செய்வதென்றுப் பகிர்வார்.

அதற்காகவும் சில கேள்விகளைக் கேட்டு நிலைமையின் வீரியத்தை அறிவார்.

"மூச்சு விடுகிறாரா, பக்கவாதம் போன்று தெரிகிறதா, பேசுகிறாரா, மயக்க நிலையில் உள்ளாரா, சுயநினைவுடன் உள்ளாரா போன்ற கேள்விகளையும் நாம் கேட்போம். அதற்குத் தக்கவாறு முதலுதவிக்கான சில பரிந்துரைகளைச் சொல்வோம்.

"உயிருக்கு ஆபத்துவிளைவிக்கும் நேரங்களில் நோயாளியின் முதல் சில நிமிடங்கள் மிக முக்கியமானவை.

"சற்று நேரத்தில் உதவி அவர்களை நாடிவிடும் என்றாலும் முடிந்ததை செய்யவேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கு இந்தப் பரிந்துரையை நாங்கள் வழங்குகிறோம்," என்று விவரித்தார் பர்மிந்தர்.

அவசரம் இல்லா மருத்துவ சம்பவங்கள் என்றால் என்ன?

- பல் வலி

- சாதாரண வயிற்று வலி

- காய்ச்சல், இருமல், சலி

- சிறிய காயம்

- சூடு காயம்

- வாந்தி, வயிற்றுப்போக்கு

- மருத்துவப் பரிசோதனை

- தலைவலி

- வாந்தி, மயக்கம்

இதுபோன்றவை, உயிருக்கு ஆபத்து இல்லாத சூழலாக இருந்தால் அருகில் உள்ள மருந்தகத்தை அணுகலாம். அல்லது 1777 என்ற எண்ணில் அவசரமில்லா மருத்துவ வண்டியை நாடலாம். அடுத்த ஆண்டு வளங்களை முறையாய் பயன்படுத்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அவசரம் இல்லா சூழல்களுக்கு அவசர மருத்துவ வண்டியை அனுப்பாது.