புதிய மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் அமுதினி சிவம், 25, இன்று மனமகிழ்ச்சியுடன் கணவருடன் சேர்ந்து சிங்கப்பூரில் பொங்கல் பொங்குகிறார். கடந்த நவம்பர் மாதம் இவருக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது.
கிருமித்தொற்று கட்டுப்பாடு களால் இவரால் தாய்நாட்டுக்குத் திரும்பவர முடியவில்லை. நான்காண்டுப் பிரிவுக்குப் பிறகு பொங்கல் கொண்டாடுவதற்காக இப்போது சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறார் அமுதினி.
ஆஸ்திரேலியத் தலைநகரான கேன்பராவைச் சேர்ந்த ஒருவரை மணம் முடித்த இவர், சிங்கப்பூரில் குடும்பத்துடன் தலைப் பொங்கலைக் கொண்டாட மிக ஆவலுடன் இருந்தார்.
வெளிநாட்டில் இருந்தபோது தம் குடும்பத்தாரைக் காணவும் சிங்கப்பூர் உணவுவகைகளைச் சுவைக்கவும் அவர் பெரிதும் ஏங்கினார்.
25 வயதாகும் அவரது கணவர் தாமஸ் பிரெண்டேன் கடல் தாண்டி பயணிப்பது இதுவே முதல் முறை. விமானத்தில் முதல்முறையாக தொலைதூரப் பயணம் மேற்கொண்டதில் தாமஸ் மிக உற்சாகமாக இருந்ததாக பகிர்ந்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பொங்கல் வைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடிய போதும் சிங்கப்பூர் வீடுகளிலும் லிட்டில் இந்தியாவிலும் இடம்பெறும் சிறப்புமிக்க தைத்திருநாள் கொண்டாட்டங்கள் தனி ஆனந்தம் தருபவை என்றார் அமுதினி.
மகப்பேற்றுத் தாதியாக பணிபுரியும் அமுதினி, 'ஓ' நிலைத் தேர்வுகள் முடிந்தவுடன் 2014ல் கேன்பராவிற்குப் படிக்கச் சென்றார். அங்கு தம்முடன் சேர்ந்து பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் உயிர்த் தோழர்தான் தாமஸ்.
சக ஊழியரின் நண்பரோடு துளிர்விட்ட நட்பு, காதலாக மலர்ந்தது. மூன்றரை ஆண்டு காதலுக்குப் பின்னர் திருமணம் நடந்தேறியது. கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த தாமஸ், இந்திய கலாசாரத்தைப் பெரிதும் விரும்புகிறார் என்றார் அமுதினி.
கோவில்களுக்கு செல்வது மன அமைதி தருவதாகவும் இந்திய கலாசாரம் வண்ணமயமானது என்றும் தமிழ் முரசிடம் கூறினார் தாமஸ்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு பொங்கலும் குடும்பத்தினரோடு கொண்டாடியதை நினைவுகூர்ந்த அமுதினி, இம்முறை கணவருடன் கொண்டாடுவது புதிய அனுபவம் என்று கருதுகிறார். கணவருக்குத் தமிழரின் பண்பு நெறிகளை எடுத்துரைக்க பொங்கல் போன்ற ஒரு திருநாள் ஏற்றது என்றார் அமுதினி. தமிழ் உணவு வகைகளில் பாயசத்தையும் தோசையையும் விரும்பி உண்ணும் தாமஸ், ஆஸ்திரேலியாவில் மின்னியல் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
மூன்று மூத்த சகோதரிகள் கொண்ட அமுதினிக்கு, தமது அக்காவின் புதிய வீட்டில் முதல்முறையாக பொங்கல் கொண்டாடுவதால் கூடுதல் மகிழ்ச்சி.
இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவிருக்கும் இந்தத் தம்பதியினர், ஆஸ்திரேலியாவில் அடுத்த பொங்கலை தமிழர் பண்பாடு நிறைந்த திருநாளாக விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
வருங்காலத்தில் தங்களுடைய குழந்தைகளிடமும் இந்திய பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்றும் தங்களின் குடும்பத்தில் இந்திய கலாசாரமும் நிரம்பி இருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.
"மருமகன் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வதும் அவற்றை உச்சரிக்க முயற்சி செய்வதையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தமிழர்களுக்கு முக்கியமான பொங்கல் திருநாளை இங்கு எங்களோடு கொண்டாடுவதும் பிற்காலத்தில் அவர்கள் அந்த மரபை வெளிநாட்டில் தொடர நினைப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது," என்று கூறினார் தாயார் சரஸ்வதி இளங்கோவன், 58.
"என்னுடைய புதிய வீட்டில் தங்கை பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தாமஸ் பொங்கலும் பாயசமும் சமைப்பதற்கு காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது," என்கிறார் அமுதினியின் சகோதரி சிவகாமி சிவம், 35.

