'வன்முறை பற்றி எடுத்துச் சொல்லி உதவி நாட சமய அமைப்புகள் பாதுகாப்பானவை'
ரச்சனா வேலாயுதம்
குடும்ப வன்முறையைத் தவிர்க்க உதவுவதில் சமய அமைப்புகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 80 விழுக்காட்டினர் சமயம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் அவர்களின் பணி, பொறுப்புகளுக்கு அவர்களுடைய சமய நம்பிக்கை உரு கொடுக்கிறது என்பதை அவர் சுட்டினார்.
"நம்முடைய இனம் பாரம்பரியம், கலாசார மரபுகள், சமய நம்பிக்கைகள், சமூக நியதிகள் எல்லாம் சேர்ந்து ஆண்களும் பெண்களும் ஒருவருடன் மற்றொருவர் நடந்துகொள்ளும் போக்கைத் தீர்மானிக்கின்றன.
"ஒருவருக்கொருவர் நம்பிக்கை அளிக்கும் பண்பாட்டிலும் அவை ஆதிக்கம் செலுத்துகின்றன. அதோடு மட்டுமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது, பொருத்தமானது என்று கருதும் நடத்தைகளுக்கும் அவை உரு கொடுக்கின்றன," என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜூரோங் குடும்ப வன்முறை தவிர்ப்பு பணிக்குழு ஏற்பாட்டில் நடந்த அனைத்து சமய நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சமூகச் சேவை அமைப்புகள், சமய அமைப்புகள், அவை தொடர்பான இதர அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 110 பேர் கலந்துகொண்டு குடும்ப வன்முறை பற்றி விவாதித்தனர்.
குடும்ப வன்செயல் என்பது உடல் ரீதியாக கொடுமைப்படுத்துவது மட்டுமல்ல. ஒருவரை அலட்சியப்படுத்துவது, மனரீதியிலும் பாலியல் ரீதியிலும் உணர்வுபூர்வமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவது பலவும் அவற்றில் அடங்கும் என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து ஆலோசனை மன்றத்தின் உறுப்பினரான திருவாட்டி சுசிலா கணேசன், "சிரமமான காலத்தில் மக்கள் கோயிலுக்கு வந்து கடவுளின் உதவியை நாடுவது வழக்கமானது. பக்தர்களின் பிரச்சினையை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு ஏற்பட உதவும் வழிகளைக் காணும் வகையில் கோயில் நிர்வாக ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
சமயத்தைத் தவறாகப் பயன்படுத்தி வன்முறையைக் கையில் எடுப்பவர்களை நாம் கண்டிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமய மன்றத்தைச் சேர்ந்த உஸ்தாஸ் இர்வான் ஹாடி கூறினார்.

