அங் மோ கியோ நகருக்குப் புதுப்பொலிவு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள நீச்சல்குள வளாகம் மேம்படுத்தப்படும். புதிய பூங்கா இணைப்புப் பாதை உருவாக்கப்படும்.
அங் மோ கியோ அவென்யூ 1ல் இப்போது உள்ள அங் மோ கியோ நீச்சல்குள வளாகத்திற்கு 'அங் மோ கியோ ஆக்டிவ்எஸ்ஜி பூங்கா' என்று பெயரிடப்படும்.
அதில் பல புதிய விளையாட்டு வசதிகள் இருக்கும். அந்த விளையாட்டுப் பூங்கா பற்றி மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
இதனிடையே, முயல் ஆண்டில் அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் பற்பல புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
அங் மோ கியோ அவென்யூ 6ல் நேற்று சீனப் புத்தாண்டு சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினருமான திரு லீ, சிங்கப்பூரில் உள்ள பழமையான நகர்களில் அங் மோ கியோவும் ஒன்று என்றார்.
இவ்வேளையில், அங் மோ கியோவில் அடுத்த சில ஆண்டுகளில் இடம்பெறவிருக்கும் மேம்பாட்டு வசதி வாய்ப்புகளையும் வடிவமைப்புகளையும் காட்டும் ஒரு கண்காட்சி நேற்று திறக்கப்பட்டது. அது இம்மாதம் 28ஆம் தேதி வரை இடம்பெறும்.
அங் மோ கியோ புதுப்பொலிவுத் திட்டம் பற்றி சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் லீ அறிவித்தார்.
"அடுத்த ஆண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதை ஒவ்வோர் ஆண்டும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம். ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டங்களை நாம் மறுபரிசீலனை செய்கிறோம்.
"வருங்கால கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்கிறோம். எல்லா யோசனைகளையும் ஒன்றுதிரட்டி குடியிருப்பாளர்களுக்கு அவற்றை காட்டுகிறோம்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
அங் மோ கியோ பகுதிக்கான இதர திட்டங்களில் லென்டோர் ஹில்ஸ் குடியிருப்புப் பேட்டையில் அமையும் புதிய பூங்காவும் ஒன்று. 8 ஹெக்டர் பரப்பளவில் அமையும் அந்தப் பூங்கா, 2024 இறுதியில் இருந்து கட்டம் கட்டமாக நிறை வடையும். அது லென்டோர் கெனலில், புதிய ஒரு கிலோமீட்டர் நீள பூங்கா இணைப்புப் பாதையுடன் இணைக்கப்படும். இது 2024 முடிவில் தயாராகும்.
இந்தப் பூங்கா இணைப்புப் பாதை மூலம் குடியிருப்பாளர்கள் இப்போது இருப்பதைவிட இன்னும் பெரிய பொழுதுபோக்கு கட்டமைப்புகளை அனுபவிக்கலாம். மேலும் பல புதிய வீடமைப்புத் திட்டங்களும் வருகின்றன. அவை 2024ல் தயாரகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எம்ஆர்டி வழித்தடங்களும் நீட்டிக்கப்படும் வழித்தடங்களும் இடம்பெறவிருக்கின்றன.

