ரச்சனா வேலாயுதம்
புத்தம் புது விடுதியில் முதன் முதலாக பொங்கல் திருநாளை வெளிநாட்டு ஊழியர்களுடன் நேற்று கொண்டாடினார் ஏ&பி ஸ்காஃபோல்ட் பொறியியல் நிறு வனத்தின் உரிமையாளர் குமாரி மாயா பாலசுப்ரமணியம், 46.
டெக் பார்க்கில் உள்ள தங்கு விடுதியில் வெளிநாட்டு ஊழியர் களுடன் குமாரி மாயா தனது குடும்பத்துடன் நேற்று காலை 6:30 மணியிலிருந்து பொங்கலுக் கான ஏற்பாடுகளை செய்தார்.
சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் ஆகியவற்றை பொங்க வைத்ததோடு அவரே தயாரித்த புளிக் கறியையும் எல்லோருக்கும் வழங்கி ருசிக்க வைத்தார்.
சுமார் 150 இந்திய, பங்களா தேஷ் ஊழியர்களுக்கு காலை உணவுடன் பொங்கலும் பரிமாறப் பட்டது. “ஏ&பி நிறுவனம், எங்களை குடும்பத்தில் ஒருவராக கருதி எங்களுடன் தமிழர் திருநாளை பெரியளவில் கொண்டாடியது” என்று 11 ஆண்டுகளாக அங்கு பணிபுரியும் பன்னீர்செல்வம் குப்புராஜ் கூறினார்.
“இந்தியாவில் பொங்கல் விழாவை கொண்டாடுவது போல, கரும்பு அலங்காரம், அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானைகள், வாசலில் கோலம், தோரணங்கள் போன்றவற்றுடன் கோலாகலமாக அலங்கரிக்கப் பட்டது” என்றார் சங்கரன் ரமேஷ்.
நேற்று ஊழியர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.
“இந்தியாவில் பொங்கல் திரு நாளை நானும் என் குடும்பத்தாரும் கோலாகலமாகக் கொண்டாடு வோம். தொற்றுநோய் காலத்தில் நாம் எல்லோரும் ஊருக்கு திரும்பி இதை அனுபவிக்க முடியாததால் சிங்கப்பூரிலேயே கொண்டாட வேண்டும் தீர் மானித்தோம்,” என்கிறார் குமாரி மாயா. தமிழர் திருநாள் கொண்டாடும் அவசியத்தை பெருமையோடு கூறுவதோடு விழாக்களை ஊழியர்களோடு சேர்ந்து கொண்டாட குமாரி மாயா விரும்புகிறார்.