அனுஷா செல்வமணி
தமிழர் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைக்கும் திருநாளான பொங்கலை இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடியது ஆதரவற்றோரையும் நினைத்துப்பார்க்கும் வகையில் இருந்தது, லிஷா நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் பகிர்தல்.
திறந்தவெளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சன்லவ் இல்லம், ஸ்ரீ நாராயண மிஷன், ஜாமியா முதியோர் இல்லம் ஆகிய மூன்று இல்லங்களை சேர்ந்த 56 இல்லவாசி களுக்கு இலவச உணவும் பொங்கலும் வழங்கப்பட்டன.
மத்திய சமூக மேம்பாட்டு மன்ற மேயர் திருமதி டெனிஸ் புவா லே பெங், நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இல்லவாசிகளுடன் உரையாடியதோடு, பொங்கல் திருநாளின் சிறப்பையும் அவர்களிடம் பகிர்ந்தார்.
சன்லவ் இல்லவாசியான திருமதி மணிமேகலை, 61, "உணவை சுவைத்ததுடன் கலை நிகழ்ச்சிகளையும் காணஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தேன்." என்றார்.
நிகழ்வின் இறுதியில் இல்லவாசிகளுக்கு அன்பளிப்புப் பைகளும் $20 பற்றுசீட்டும் வழங்கப்பட்டு, கால்நடைகளை கண்டு மகிழவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீ நாராயண மிஷனைச் சேர்ந்த 90 வயது திருவாட்டி சண்முகத்தாயி, நேற்று கால் நடைகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.
கால்நடைகளைக் காணும் இதுபோன்ற நிகழ்வுக்கு தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, மாலை ஆறு மணிக்கு லிட்டில் இந்தியா ஆர்கேட்டின் வெளிப்புறத்தில் இலவசமாக பொங்கல் விநியோகிக்கப்பட்டது.
லிஷா ஏற்பாடு செய்திருந்த பொங்கல் பகிர்தலில் கிட்டத்தட்ட 10,000 பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலும், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலும் இணைந்து தயாரித்த சர்க்கரை பொங்கலை சுவைக்க, லிட்டில் இந்தியா ஆர்கேட்டிலிருந்து தேக்கா ப்ளேஸ் கடைத்தொகுதி வரை பலர் வரிசையில் காத்திருந்தனர்.

