ஆ. விஷ்ணு வர்தினி
சமூகத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'கம்யூனிட்டி', பூன் லே டிரைவ், புளோக் 190ன் அடித்தளத்தில் சுவரோவியமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு உயிரூட்டியவர், சுவரோவியக் கலைஞர் தச்சனா முராரி பாலகிருஷ்ணன். அவரின் வழிகாட்டுதலில் சிறுவர்கள், இளையர்கள், முதியவர்கள் எனப் பலர் இந்தச் சுவரோவியத்தை அழகுபடுத்தியுள்ளனர்.
அதேபோல, புளோக் 190க்கு எதிரே அமைந்துள்ள குப்பை சேகரிப்பு நிலையத்தின் பெருஞ்சுவரில் பூன் லேயின் மரபுடைமையைக் கூறும் சுவரோவியத்தைத் தீட்டியுள்ளார், தச்சனா. 1980களில் பூன் லேயில் கட்டப்பட்ட 'கிளாக் டவர்' விளையாட்டு மைதானம், முன்னர் அவ்வட்டாரத்தில் நிறைந்திருந்த ரப்பர் மரங்கள், மங்கூஸ்தீன், டுரியான் பழங்கள் முதலிய அடையாளச் சின்னங்களைக்கொண்டு பூன் லேயின் வரலாற்றைச் சித்திரித்துள்ளது இச்சுவரோவியம்.
சுவரோவியக் கலையின்பால் தச்சனா கொண்டிருந்த ஆர்வமே அவர் 2019ல் குடியேறிய பூன் லே குடியிருப்புக்கு உயிரூட்டும் எண்ணத்தை அவருள் விதைத்தது. இம்முயற்சிக்காக தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவை நாடிப் பெற்றார் அவர்.
சுமார் 17.8 மீட்டர் அகலமும் 4.6 மீட்டர் உயரமும் கொண்ட 'பூன் லே ஹெரிட்டேஜ் வால்' சுவரோவியத்தை, நான்கு நாட்களில் 'வொண்டர்' என்ற மற்றொரு சுவரோவியக் கலைஞரு டன் இணைந்து படைத்திருந்தார் தச்சனா. இது, அவரது ஆகப் பெரிய சுவரோவியங்களில் ஒன்றாகும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக சுவரோவியக் கலையைக் கருதும் தச்சனாவுக்கு இக்கலையே வாழ்வில் பிடிமானம் தந்தது.
"உயர்நிலை மூன்றில் படிப்பில் நான் பின்தங்கிவிட்டேன். கல்வியில் மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பயணத்திலும் திசையறியாமல் திரிவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது சுவரோவியக் கலையே எனக்குக் கைகொடுத்தது," என்றார் 35 வயது தச்சனா.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள சுவின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறையில் படித்துக்கொண்டிருந்த அவருக்கு தற்செயலாக அறிமுகமான இக்கலை காலப்போக்கில் அடையாளமானது.
முதலில் முப்பரிமாண முறையில் அச்சுத் தகடுகளை (stencils) வடிவமைத்து அடிப்படையான சுவரோவியங்களை வரைந்தார் தச்சனா. ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்பட்ட வீதி சித்திரக் கலாசாரத்துடனான அவர் தொடர்பு தொடங்கியது.
பின்னர், உலகப் புகழ்பெற்ற மெல்பர்னின் 'ஹோசியர் லேன்'ல் இரு பக்கமும் பிரம்மிப்பில் ஆழ்த்தும் சுவரோவியங்களைக் கண்டு உற்சாகம் பெற்றார் தச்சனா.
ஓராண்டு காலத்துக்குத் தனது சுவரோவிய வழிகாட்டியாக இருந்த ஃபெக்டரின் நட்பையும் அங்கு அவர் பெற்றார்.
தனித்துவமான இக்கலையில் களமிறங்குவதற்கு வயதோ அனுபவமின்மையோ ஒரு தடையாக அவருக்குத் தெரியவில்லை. யூடியூப் காணொளிகளைப் பார்த்து இக்கலையைக் கற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில், பொது இடங்கள் பெரும்பாலானவற்றில் சுவரோவியங்கள் வரையலாம். ஆனால், அவை அதிகபட்சம் ஒரு சில மணி நேரத்திற்கு, அல்லது ஒரு நாளுக்கு மட்டுமே நிலைத்திருக்கும்.
ஏனெனில், மற்ற சுவரோவியக் கலைஞர்கள் அந்த ஓவியங்களின் மீதே தங்களின் படைப்புகளைத் தீட்டிடுவர். இந்த நிலையற்ற தன்மையே சுவரோவியக் கலையைத் தனித்துவமாக்குவதாகக கூறுகிறார் தச்சனா.
தச்சனாவின் அனுபவங்கள் 2014ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரிலும் தொடர்கின்றன. தற்போது பள்ளி ஒன்றில் தமது முழுநேரப் பணிக்கு இடையே, தனித்துவமான படைப்புகளை உருவாக்கி வருகிறார், இவர்.
"நம்மை நமது உணர்வுகளிலிருந்து, கவலைகளிலிருந்து விடுவித்து, அதிக சுதந்திரம் தரக்கூடியது, சுவரோவியக் கலை என்பதை எந்த ஒரு கலை பின்னணியும் இல்லாத நான், பின்னர் உணர்ந்தேன். வேறுபாடின்றி அனைவரையும் அரவணைக்கும் தன்மையே அதன் சிறப்பாகும் என்று உறுதியாகக் கூறுவேன்," என்றார் தச்சனா.

