மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தால் கூடுதல் அனுபவ வாய்ப்புகள்

மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தால் கூடுதல் அனுபவ வாய்ப்புகள்

2 mins read
38ce1d3c-1124-4634-9409-1f3fddec41f5
-

நோய்ப்­ப­ர­வல் சூழ­லால் உரு­மாறி வரு­கிறது நம் நாட்­டின் சுகா­தா­ரத் துறை. 2030ஆம் ஆண்­டுக்­குள் 24,000 ஊழி­யர்­களை சுகா­தா­ரத் துறைக்கு ஈர்க்­கும் இலக்­கு­டன் மாண­வர்­களை இதற்­காக தயார்­படுத்­தும் முயற்­சி­யில், நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் உயிர் மருத்­துவ அறி­வி­யல் பட்­ட­யப்­ப­டிப்பு மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேம்­பாடு கண்ட இந்த பாடத்­திட்­டத்­தில், மூன்­றாம் ஆண்டு மாண­வர்­கள் இனி தங்­க­ளின் விருப்­பத்­துக்கு ஏற்ப இரு கல்­விப்­பா­தை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம்.

ஓராண்டு காலத்­திற்கு மாண­வர்­கள் சிங்­கப்­பூர் பொது மருத்து­வ ­ம­னை­யு­ட­னான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மருத்­து­வப் பயிற்சி ­யில் ஈடு­ப­ட­லாம். அல்­லது, செயல்­முறை சார்ந்த உயிர் மருத்­துவ அறி­வி­யல் பாதை­யைத் தேர்ந்­தெ­டுத்து, சிங்­கப்­பூர் தேசிய புற்­று­நோய் நிலை­யம், 'தெமா­செக் லைஃப்சைன்­சஸ் லெபா­ரட்­டரி' முத­லிய அமைப்­பு­க­ளு­டன் மாண­வர்­கள் இணை­ய­லாம். தேர்ந்­தெடுக்­கப்­பட்ட நிறு­வ­னத்­தில் ஆறு மாத கால வேலைப் பயிற்சியை அவர்­கள் மேற்­கொள்ளலாம்.

உரு­மாற்ற ஆராய்ச்சி, சுகா­தார சேவை ஆராய்ச்சி, மருத்­து­வப் பரி­சோ­தனை, நோய­றி­தல், மருத்­து­வப் புத்­தாக்­கம் ஆகிய ஐந்து அம்­சங்­கள் தொடர்­பில் மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் அனு­ப­வம் கிடைக்­கும்.

மூன்­றாம் ஆண்டு மாண­வ­ரான கே. எஸ். கௌதம், மருத்­து­வம் படித்து எதிர்­கா­லத்­தில் இத­ய­வி­யல் தொடர்­பான மருத்­து­வ­ரா­கும் கனவு கொண்­டுள்­ளார். பாடத்­திட்ட மாற்­றங்­க­ளால் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் கிட்­டும் வாய்ப்பு, தனக்­குக் கைகொ­டுக்­கும் என நம்­பு­கி­றார்.

"நான் சிறு­வ­ய­தாக இருந்­த­போது என் தாத்தா மார­டைப்­பால் உயி­ரி­ழந்­தார். மருத்­து­வ­ரா­கும் என் கன­வுக்கு அந்­தச் சம்­ப­வமே வித்­திட்­டது. ஆனால், ஒரு மருத்­து­வ­ரின் வாழ்க்கை எப்­படி இருக்­கும், எவ்­வ­கை­யான சிர­மங்­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார், நெருக்­க­டி­களை எவ்­வாறு கையாள்­கி­றார் ஆகி­யவை, நேரடி அனு­ப­வத்­தின்­மூ­லம் மட்­டுமே தெரிய வரும்," என்­றார் கௌதம்.

குறிப்­பாக, 'கிரிஸ்­பர்' (CRISPR) எனப்­படும் மர­பணு திருத்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்பை ஆவ­லு­டன் தான் எதிர்­பார்ப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய தொழில்­நுட்­பங்­களை, மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­களை நேர­டி­யா­கக் கையாள்­வதன்­மூ­லம் கற்­றுக்­கொண்­ட­வற்­றைச் செயல்­ப­டுத்தி பார்த்து, முக்­கி­ய­மான திறன்­களை மாண­வர்­கள் வளர்த்­துக்­கொள்­ள­லாம் என்று தெரி­வித்­தார், நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் உயிர் மருத்­து­வப் பாடத்­து­றைத் தலை­வர் டாக்­டர் சுஜித் தத்தா.

"ஆழ­மான புரி­தலை ஏற்­ப­டுத்­து­வ­தும் நடை­முறை சிக்­கல்­க­ளைக் கையாள மாண­வர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தும் இப்­பா­டத்­திட்ட மாற்­றங்­க­ளின் நோக்­க­மா­கும். மாறி­வ­ரும் சுகா­தா­ரத் துறை சூழ­லில், மாண­வர்­க­ளுக்கு அவ­சி­யம் தேவைப்­ப­டு­வது வாழ்க்­கைத்­தொழில் மீள்­தி­றனே. மாண­வர்­களி­டத்­தில் அதை வலுப்­ப­டுத்த விரும்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

செய்தி: ஆ. விஷ்ணு வர்­தினி