வேலைகள் இயந்திரமயமாகி வருவதாலும் மின்னிலக்கமயத்தாலும் அதிகக் கல்வித் தகுதி பெற்ற சிங்கப்பூரர் ஊழியர்களைவிட குறைந்த கல்வித் தகுதி உள்ள சிங்கப்பூர் ஊழியர்களின் வேலைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்ட ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
கல்வித்தகுதி குறைவாக உள்ளவர்கள் அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. வேலையிட மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை அவர்களிடம் குறைவாக உள்ளது, பயிற்சி பெறுவதில் அவர்கள் அதிக வல்லவர்கள் இல்லை என்று நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு குறிப்பிட்டது.
பட்டப்படிப்பு படித்தவர்களுடன் ஒப்பிடும்போது, உயர்நிலைப் பள்ளியில் படித்த ஊழியர்கள் வேலை மாறுவது பற்றி அதிகம் கவலை கொள்வதாகவும் ஆய்வு தெரிவித்தது. சிங்கப்பூரில் ஏறத்தாழ 2.3 மில்லியன் உள்நாட்டு ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 27 விழுக்காட்டினர் குறைவான கல்வித் தகுதி பெற்றவர்கள் என்றும் இப்பிரிவினருக்கு உதவிகள் தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
குறைவான கல்வித் தகுதி பெற்ற உள்நாட்டு ஊழியர்களில் பத்தில் எட்டுப் பேர், பிள்ளைப் பருவத்தில் இருந்ததைவிட தாங்கள் தற்போது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறினர். ஆனால் அவர்கள் வருங்காலத்தில் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் அடைந்து அடுத்த நிலைக்குச் செல்வது கேள்விக்குறியாக உள்ளது.
ஆய்வுக்கு கூட்டாகத் தலைமை வகித்த டாக்டர் லோரல் டியோ, "இந்த இடைவெளிகளையும் அபாயங்களையும் கவனித்து சரிசெய்யவில்லை என்றால், நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு சமூகப் படிநிலை முன்னேற்றத்தை இவ்வாறு எட்ட முடியும் என்று தெரியவில்லை," என்றார்.
கடந்த அக்டோபரில் 1,010 உள்நாட்டு ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. சிங்கப்பூர் ஊழியர்கள் எதிர்கால வேலைகளுக்குத் தயாராய் உள்ளனரா அவர் களின் தொழில் இலக்குகள் யாவை, சமூகத்தில் முன்னேற்றம் தொடர்பான அவர்களின் கருத்து ஆகியவை பற்றி ஆராயப்பட்டது.
பல ஆண்டுகளாக சிங்கப்பூர், தொழில்துறை, சேவைத் துறை வேலைகளைவிட அறிவுசார் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளதை ஆய்வு சுட்டியது.
சுமார் 3.5 மில்லியன் பேர் அடங்கிய சிங்கப்பூரின் ஒட்டுமொத்த ஊழியரணியில் 20 விழுக்காட்டினர் தொழில்நுட்ப, சேவை வேலைகளில் பணிபுரிகின்றனர். கொவிட்-19 சூழலில் இத்தகைய துறை ஊழியர்கள் அத்தியாவசிய ஊழியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
எழுத்தர், சேவைத் துறை ஊழியர், தொழிற்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள், உள்ளடக்கிய பிரிவினரில் பாதிக்கும் குறைவானவர்கள், தங்களுக்கு அர்த்தமுள்ள தொழில் இருப்பதாகவும் தங்கள் வேலை சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வில் கூறினர்.
மாறாக, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரில் பத்து பேரில் ஆறு பேர் தங்கள் வேலை அர்த்தமுள்ளது என்று கருதினர்.
அத்துடன், சற்று அதிக வயதுஉள்ளவர்களைவிட, 21 வயது முதல் 34 வயது வரையிலானவர்களின் சமூகத் தகுதிநிலை சற்று குறைவாகவே உயர்ந்தது என்று ஆய்வு கண்டறிந்தது.
முன்னைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது சொத்து சேர்க்க இளையர்களுக்கு அதிக நேரம் இல்லாதது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் விளக்கினர்.

