செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e10c6dbe-d9b5-4982-823b-dbd035a2d056
-

பாரந்தூக்கிகளை மேம்படுத்த

$4 மில்லியன் உதவித்தொகை

பாரந்தூக்கிகளை மேம்படுத்த கட்டுமான நிறுவனங்களுக்கு $4 மில்லியன் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உதவித் தொகையைப் பயன்படுத்தி, பாரந்தூக்கிகளில் அளவுக்கு அதிகமான எடை சேர்வது அல்லது அவை கவிழ்வது போன்றவற்றைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பங்களை பாரந்தூக்கிகளில் நிறுவனங்கள் பொருத்தலாம்.

மனிதவளத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, பாரந்தூக்கிகள் தொடர்பிலான 11வது வேலைப் பாதுகாப்பு, சுகாதார கருத்தரங்கில் அதை நேற்று அறிவித்தார். கடந்த ஆண்டில் பாரந்தூக்கிகள் தொடர்பான விபத்துகள் உயர்ந்திருப்பது கவலை தருவதாக அவர் கூறினார்.

ஜன. 23ஆம் தேதி இஸ்தானா திறப்பு

சீனப் புத்தாண்டை முன்னிட்டு இஸ்தானா வரும் ஜனவரி 23ஆம் தேதி திங்கட்கிழமை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படவுள்ளது. காலை 8.30 மணி முதல் 6 மணி வரை இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.

அங்கு நேரடி நிகழ்ச்சிகள், நடவடிக்கை கூடங்கள், மெழுகுவர்த்தி செய்தல், சீனப் பாரம்பரிய எழுத்தோவியம், மருதாணி வைக்கும் முகப்பு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்தானாவில் புதுப்பிக்கப்பட்ட அன்னக்குளத்தை அருகில் பார்க்கும் வசதியும் உண்டு.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இசை, நடன, மத்தள இசை நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர்.

வழிகாட்டிகளின் உதவியுடன் இஸ்தானா கட்டடத்தின் சில குறிப்பிட்ட நிகழ்ச்சி அறைகளுக்குள் சென்று சுற்றிப் பார்க்கலாம். சிங்கப்பூர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

பெண்கள் தலைமை ஏற்க வேண்டும்

சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கள், மற்ற அமைப்புகள் ஆகியவற்றுக்குக் கூடுதல் பெண்கள் தலைமை வகிக்க வேண்டும் என்று முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான இண்டான் அஸுரா மொக்டார் கூறியுள்ளார். வேலை தொடர்பாக கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று நடத்திய மாநாட்டில் நடைபெற்ற அமர்வு ஒன்றில் அவர் பேசினார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக இணைப் பேராசிரியரான டாக்டர் இண்டான், சிங்கப்பூரின் ஆறு தன்னுரிமைபெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றில்தான் ஒரு பெண் தலைவராக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், நிறுவனங்களின் நிர்வாக மன்றங்கள், நிர்வாகத் தலைமை, மூத்த பதவிகள் ஆகியவற்றில் ஆண்களே பெரும்பான்மை வகிப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையை மாற்றுவது பற்றி சிங்கப்பூர் ஆராய வேண்டும் என்றார் டாக்டர் இண்டான்.

பாதுகாப்பு தரும் பூஸ்டர் தடுப்பூசி

எம்ஆர்என்ஏ வகை பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ள சிங்கப்பூர்வாசிகள், கடுமையான கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைப் பெற்றுள்ளார்கள். கிராக்கென் போன்ற புதிய கிருமி வகைகள் தொற்றியபோதும் தடுப்பூசிகள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக டியூக்-என்யூஎஸ் மருத்துவக் கல்லூரியில் புதிய தொற்றுநோய் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஊய் எங் இயோங் கூறியுள்ளார்.

மற்ற பல நாடுகள் உடலில் பிறபொருள் எதிரிகளை அழித்து தொற்று ஏற்படாமல் தடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் அந்த தடுப்பாற்றல் ஒரு சில மாதங்களில் குறைந்துவிடுகிறது. கொவிட்-19 அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டதால், தொற்றைத் தடுப்பதைவிட கடும் நோய்களையும் மரணத்தையும் தடுப்பதே முக்கியம் என்றார் டாக்டர் ஊய்.

வரவுசெலவுத் திட்டப் புதிர்ப்போட்டி

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.

அதை முன்னிட்டு முக்கிய அரசாங்கக் கொள்கைகள் பற்றியும் வரவுசெலவுத் திட்டம் பற்றியும் சிங்கப்பூரர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சு வரவு செலவுத் திட்டப் புதிர்ப்போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. புதிர்ப்போட்டி 13வது முறையாக இடம்பெறுகிறது. பிப்ரவரி 3 வரை புதிர்ப்போட்டியில் பங்கெடுக்கலாம். மாணவர்கள், பொதுமக்கள் என இரு பிரிவுகள் உள்ளன. வெற்றியாளர்களுக்குப் பரிசுண்டு.

புதிர்ப்போட்டிக்கான இணைய முகவரி:

www.singaporebudget.gov.sg

பயனியர் நார்த் அருகே விபத்து

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அருகே பயனியர் நார்த் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு காரும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமுற்றனர். 22 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் சேர்ந்து பயணம் செய்த 39 வயது ஆடவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் பயனியர் ரோடு நார்த் சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது. அதுபற்றி இரவு 8.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.