ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் திட்டமிட்டபடி நடைபெறுகிறது
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் பாதை (ஆர்டிஎஸ்) திட்டத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் வரும் 2026 இறுதிக்குள் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இருநாட்டு இலக்கு எட்டப்படும் என்றும் சிங்கப்பூர், மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஸாம்ரி அப்துல் காதிரை நேற்று சந்தித்தார்.
"அவர்கள் இருவரும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன் 2026 இறுதிக்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துக்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகாருக்கும் இடைப்பட்ட நான்கு கிலோமீட்டர் ரயில் சேவை தொடங்கும்போது ஒரு மணிநேரத்துக்கு 10,000 பயணிகள் செல்லமுடியும்.
இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று மின்னிலக்கம், பசுமை பொருளியல் என இருதரப்பு ஒத்துழைப்பின் விரிவாக்கம் பற்றி பேசினர்.
டாக்டர் விவியன், அமைச்சர் ஸாம்ரியை சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
பின்னர் மலேசிய மாமன்னர் அப்துல்லா அகம்மது ஷாவைச் சந்தித்த அமைச்சர் விவியன், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுவாக்கும் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.
டாக்டர் விவியன் நாளை வரை மலேசியாவில் இருப்பார் என்றும் அமைச்சு கூறியது.

