துப்புரவு, கழிவுப்பொருள் சேகரிப்பு, பூச்சிக்கொல்லி மேலாண்மை பணிகளைக் கவனிக்கும் சில நிறுவனங்களில், ஊழியர் பற்றாக்குறை நிலவினாலும் சுற்றுப்புறம் தொடர்பான ஒரு சேவைக்கு அப்பால் தங்கள் சேவைகளை விரிவுப்படுத்திக்கொள்ள அவை ஊக்குவிக்கப்படுகின்றன.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்புற சேவைகள் தொழில்துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, தரநிலைகளை உயர்த்தும் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்ட நோக்கமும் இடம்பெற்றுள்ளது.
போதுமான வளங்களைக் கொண்ட நிறுவனங்களின் ஆற்றல்களை மேம்படுத்த வாரியம் எண்ணம் கொண்டுள்ளது. அப்போது அவற்றில் 10% நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் சேவைக்கு அப்பால் பல சேவைகளை வழங்கும் வகையில் விரிவாக்கம் பெற்றிருக்கும்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஊழியரணி பற்றாக்குறையை இத்துறை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், புதுப்பிக்கப்பட்ட திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 2020ல் துப்புரவாளர்கள், கழிவுப்பொருள் சேகரிப்பு, ஊழியர்கள் மலேசியாவுக்குத் திரும்பி விட்டனர்.
இதன் காரணமாக மனித உழைப்பை அதிகம் சார்ந்திருந்த இத்துறை, இயந்திர மனித துப்புரவுச் சாதனங்கள் போன்ற தொழில்நுட்ப உத்தியைக் கையில் எடுத்தது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தொழில்துறையை உருமாற்றும் புதுப்பிக்கப்பட்ட திட்டம் மூலம் 2025க்குள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கான மேலும் 1,600 வேலைகள் உருவாக்கப்படும்.
தரவு பகுப்பாய்வாளர்கள், நீடித்த நிலைத்தன்மை மேலாளர்கள் போன்ற வேலைகளும் அதில் அடங்கும்.
சுற்றுப்புற சேவைகள் தொழில்துறையின் உருமாற்றத் திட்டம் 2025 நிகழ்ச்சியில் பேசிய சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், "சுற்றுப்புற சேவைகள் தொழில்துறை சார்ந்த தேசிய சவால்கள், ஆய்வு, மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவை மூலம் மதிப்புகூட்டப்பட்ட வாய்ப்புகளாக மாற்றி அமைக்கப்படும்," என்றார்.
வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து துப்புரவு, கழிவுப்பொருள் சேகரிப்பு துறைகளுக்கு படிப்படியான சம்பள உயர்வு முறை அறிமுகமானவுடன், இங்குள்ள 44,000 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் டாக்டர் கோ கூறினார்.
சுற்றுப்புறத் தொழில்துறையில் தற்போது 1,700 நிறுவனங்களில் 71,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

