ரச்சனா வேலாயுதம்
மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்தது வயல்வெளி காலமா வாட்ஸ்அப் காலமா என்ற தலைப்பில் சென்ற 14ஆம் தேதி பொங்கல் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நடந்தது. லிஷாவுடன் இணைந்து லிஷா இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் நடந்த இந்த பட்டிமன்றம் பொலி@ கிளைவ் ஸ்திரீட்டில் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த பட்டிமன்றத்தைக் காண ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர்.
தமிழ்த்தென்றல் முனைவர் எஸ்.டி. கலையமுதன் பட்டிமன்றத்தின் நடுவராக நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
இயற்கையான வயல்வெளி காலமே சிறந்தது, செயற்கைவாட்ஸ்அப் காலம் நாம் மனநிம்மதியைக் கெடுத்துள்ளது என்று திரு தங்கம் மூர்த்தி, திருமதி பா.கங்கா, திரு நா.அர்ஜுன் வாதாடினர்.
'பல் போனால் சொல் போகும்' என்ற காலம் முடிந்து இப்போது செல் (cell) போனால், உயிரே போகும் என்று தொழில்நுட்பத்திற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்பதை சுட்டி நகைச்சுவையுடன் விவாதித்தனர்.
மாறுகின்ற உலகம் மகத்துவமானதேயொழிய, மாற்றமே இல்லை என்று மாறாமல் இருப்பவர்கள் கல்லுக்குகூட சமமில்லை என்று கூறி, வாட்ஸ்அப் காலத்தின் நன்மைகளை எடுத்துக் கூறினார் திரு கண்ணன் சேஷாத்ரி.
அவருடன் திரு சுந்தரராமன், திரு தமீம் அன்சாரி இருவரும் தொழில்நுட்பக் காலம் பல திறமைகளை வெளிப்படுத்தவும் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் உதவியுள்ளது என்று வாதாடி கைதட்டலைப் பெற்றனர்.
தொழில்நுட்பக் காலத்தின் நன்மைகளை அறிந்து, நமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் நிலையில் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ முடியும் என்று கூறி, சற்றும் மனம் தளராத நம்பிக்கையுடன் வாழ ஊக்குவிக்கும் இந்த வாட்ஸ்அப் காலமே சிறந்தது என்று முனைவர் கலையமுதன் தீர்ப்பு வழங்கினார்.

