செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2ad777be-6017-428e-9841-b9404f875a27
-

இரண்டு மாதக் குழந்தைக்கு காயம் விளைவித்த இருவர் மீது குற்றச்சாட்டு

இரண்டு மாதக் குழந்தைக்கு மண்டை ஓடு உடையும் அளவுக்குக் காயம் விளைவித்த ஆடவர் ஒருவர், பெண் ஒருவர் என இருவர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு என்ன உறவு என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. குழந்தையின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தற்போதைய நிலைமை என்னவென்றும் தெரிவிக்கப்படவில்லை.

சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட 31 வயது ஆடவர், இம்மாதம் 5ஆம் தேதி பின்னிரவு 1.30 மணிக்கு செம்பவாங்கில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் குழந்தையின் முகத்தில் அறைந்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அதனால் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது. பின்னர் மூன்று நாள் கழித்து 29 வயது பெண், அதே புளோக்கில் இன்னொரு வீட்டில் அந்தக் குழந்தைக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளார். அவர் குழந்தையைத் தொட்டிலில் பலமாக வீசியதால், குழந்தையின் மண்டை ஓடு உடைந்தது என்று கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மனநலப் பரிசோத னைக்காக மனநலக் கழகத்தில் விசாரணைக் கைதிகளாக வைக்கப்படுவார்கள். அவர்களின் வழக்கு இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஃபிர்தவுஸ் மீது மதுபோதையில் வாகனமோட்டிய குற்றச்சாட்டு

மலாய் தற்காப்புக் கலையான சீலாட் 2018 உலக வெற்றியாளர் ஷேக் ஃபிர்தவுஸ் ஷேக் அலாவூதின் (படம்) மீது மதுபோதையில் வாகனமோட்டிய தாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. நீதிமன்ற ஆவணங் களின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பின்னிரவு 2.30 மணிக்கு கெப்பல் ரோட்டை நோக்கிச் செல்லும் கண்டோன்மன்ட் ரோட்டில் வாகனமோட்டி சென்றபோது, அவரது 100 மில்லிலிட்டர் மூச்சுக்காற்றில் 93 மில்லிகிராம் மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி அனுமதிக்கக்கூடிய அளவு 100 மில்லிலிட்டர் மூச்சுக் காற்றில் 35 மைக்ரோகிராம் மது அளவு.

26 வயதாகும் ஷேக் ஃபிர்தவுஸ், சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி ஷேக் அலாவூதின் யாக்கூப் மரிக்கானின் புதல்வர்களில் ஒருவர்.

தனது தேசிய விளையாட்டாளர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் சம்மேளனம் தலையிடாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பிய அறிக்கையில் சம்மேளனம் தெரிவித்தது.

"இருப்பினும், தேவைப்பட்டால் ஃபிர்தவுசுக்கு இந்த நீதிமன்ற வழக்கு தொடர்பான உணர்வுப்பூர்வ மற்றும் மனநல ஆதரவை நாங்கள் அளிப்போம்," என்றும் சம்மேளன செய்தித் தொடர்பாளர் கூறினார். ஃபிர்தவுசின் வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பாட நூல்களின் விலை

7% வரை உயர்ந்துள்ளது

அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடநூல்களுக்கு கடந்த ஈராண்டுகளாக நீடித்த விலை முடக்கம் முடிவடைந்து உள்ள நிலையில், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி களில் பயிலும் தங்கள் பிள்ளைகளின் பாடநூல்களுக்கு பெற்றோர் 7% வரை அதிக விலை கொடுக்க வேண்டி யிருக்கும். அரசாங்க அங்கீகாரப் பட்டியலில் இடம்பெறாத நூல்களின் விலையும் அதிகபட்சமாக 21% வரை உயரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சு, "20% அதாவது 1,000 தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் நிலையிலான பாட நூல்கள் அல்லது 200 பாட நூல் தலைப்புகள் 7% வரை விலை கூட்டி விற்க அமைச்சு அனுமதி அளித்துள்ளது. விலை உயர்வு ஒரு பாடநூலுக்கு ஐந்து காசு முதல் 65 காசு வரை இருக்கும்.

"கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளியல் சவால்களால் பாடநூல் பதிப்பாளர்கள் கடந்த ஈராண்டுகளாக தாங்களே பாடநூல் தயாரிப்பின் கூடுதல் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இப்போது உலகளாவிய பொருளியல் சற்று மேம்பட்டு, செயல்முறை, மூலப்பொருள் செலவுகள் அதிகரித்திருப்பதால், பாடநூல்களின் விலையைப் பதிப்பாளர்கள் உயர்த் தக்கூடிய கட்டாயத்தில் உள்ளனர்," என்று தெரிவித்தது.