பழம்பெரும் உள்ளூர் காற்பந்து வீரர் 'போத்தாக்' சுப்பையா காலமானார்

பழம்பெரும் உள்ளூர் காற்பந்து வீரர் 'போத்தாக்' சுப்பையா காலமானார்

2 mins read
e732ba2b-050f-4d89-bf9f-c3abfe472b86
-

பிரசன்னா கிருஷ்ணன்

ஐம்­ப­து­களில் சிங்­கப்­பூ­ரின் அடித்­த­ளச் சூழ­லில் காற்­பந்து வீர­ரா­கத் திகழ்ந்த 'போத்­தாக்' சுப்­பையா எனச் செல்­ல­மாக அழைக்­கப்­படும் கருப்­பையா சுப்­பையா நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 85.

ஜூரோங் வட்­டா­ரத்­தில் இருந்த ஒரு கம்­பத்­தில் பிறந்து வளர்ந்த திரு சுப்­பையா, சிங்­கப்­பூ­ரில் பிரிட்­டிஷ் ஆட்­சிக் காலத்­தில் அவர்­க­ளின் ஆகா­யப் படை­யில் நிய­மிக்­கப்­பட்ட முதல் இந்­தி­யர் என்ற பெரு­மை­யைப் பெற்­ற­வர் என இவ­ரின் தம்பி கே. கந்­த­சாமி தெரி­வித்­தார்.

பிரிட்­டிஷ் படை­யி­னர் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­றும் வரை திரு சுப்­பையா ஆகா­யப் படை­யில் இருந்­த­தா­க­வும் திரு கந்­த­சாமி கூறி­னார்.

"இத்தகைய ஒரு­வரை அண்­ண­னாகப் பெற்றது நான் பெற்ற வரம். எனது வேலைச் சூழ­லால் அவர் (திரு சுப்­பையா) உட்­பட எனது குடும்­பத்­தா­ரு­டன் அதிக நேரம் செல­விட முடி­யா­மல் போனது.

"அவ்­வப்­போது தொலை­பே­சி­வழி அவர் என்­னு­டன் பேசு­வார். ஆனால் அதிக நேரம் பேசி­ய­தில்லை. பொது­வாகக் காற்­பந்து விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் மட்­டும்­தான் அவர் பழ­கு­வார்," என்று குறிப்பிட்டார் திரு கந்தசாமி.

திரு சுப்­பை­யா­விற்கு இரண்டு பிள்­ளை­கள், மூன்று பேரப் பிள்­ளை­கள், ஒரு கொள்­ளுப் பேரப்­பிள்ளை இருக்­கின்­ற­னர்.

இவ­ரின் மன­வு­று­தியை நினைவு­கூர்ந்­தார் மகள் சாந்தா சுப்­பையா.

"அவர் ஒரு பாச­மான தந்தை, அன்­பான மனி­தர். எதை­யும் சொந்­த­மா­கச் செய்ய விரும்­பு­வார். குடும்­பத்­தா­ருக்கு எப்­போ­தும் உணவு தயார்­செய்­து தரு­வார். அவர் மிக­வும் சிறந்த தாத்­தா­வா­க­வும் இருந்­தார். பேரப் பிள்­ளை­க­ளைத் தந்­தை­யைப் போல் கவ­னித்­துக்­கொண்­டார்," என்று திரு­வாட்டி சாந்தா பெருமையுடன் கூறினார்.

திரு சுப்­பை­யா­வின் மறை­வுக்­குக் காற்­பந்து உல­கி­லும் பலர் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

திரு சுப்­பையா மிக­வும் அரு­மை­யான மனி­தர் என்­றும் காற்­பந்தை மிக­வும் நேசித்­த­வர் என்­றும் கூறி­னார் வெங்கா எனப் பல­ரால் அழைக்­கப்­படும் உள்ளூரில் புகழ்­பெற்ற காற்­பந்து நிர்­வாகி ஆர். வெங்­க­டா­ச­லம்.

"வேறு கால­கட்­டத்­தைச் சேர்ந்­த­வர் என்­றா­லும் என்­னை­விட அவ­ருக்­குத்­தான் காற்­பந்­து­மீது மோகம் அதி­கம். சொந்­தச் செல­வில் பைனி­யர் ஆர்­ச­னல் என்ற உள்­ளூர் காற்­பந்­துக் குழுவை நடத்­தி­னார்," என்­றார் திரு வெங்கா.

திரு சுப்­பையா, பலர் விரும்­பிப் பார்க்­கும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் விளை­யா­டும் ஆர்­ச­னல் குழு­வின் ரசி­கர் என்­ப­தைக் குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூர் காற்­பந்து பற்­றிய நூலின் ஆசி­ரி­யர் ஏ. தியா­க­ராஜு.

"ஆர்­ச­ன­லைப் பற்றி அடிக்­கடி பேசு­வார். நீண்­ட­கா­ல­மாக அக்­குழு லீக் கிண்­ணத்தை வெல்­லா­ததை நினைத்து வருத்­தப்­ப­டு­வார். இந்­தப் பரு­வத்­தில் ஆர்­ச­னல் லீக் கிண்­ணத்தை வெல்­லும் வாய்ப்­பு­உள்­ளது. ஆனால் அப்­படி நடந்­தால் அதைக் காண திரு சுப்­பையா இருக்­க­மாட்­டார் என்பது வருத்தம் தருகிறது," என்று கூறினார் திரு தியாகராஜு.

சிங்கப்பூரின் இளம் காற்­பந்து வீரர்­களுக்கு ஊக்­க­மாக விளங்­கி­ய­வர் என்று போற்­றப்­படுகிறார் திரு சுப்­பையா.