சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் வாடகை சென்ற ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 21 விழுக்காடு உயர்ந்தது. இந்தப் போக்கு இவ்வாண்டும் தொடரும் என புளூம்பெர்க் ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.
நாட்டின் பொருளியல் தொடர்ந்து மீட்சியடையும் வேளையில் வேலைவாய்ப்புகளும் குடும்பங்களின் வருவாயும் பழைய நிலைக்குத் திரும்புவதால், இந்த ஆண்டில் தனியார் வீடுகளின் வாடகை மேலும் 10 முதல் 15 விழுக்காடு வரை உயரக்கூடுமென்று அவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் சென்ற மாதம் புதிய தனியார் வீடுகளின் விற்பனை தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்ததையும் அது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் ஆகக் குறைவாகப் பதிவானதையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு 18,234 தனியார் வீடுகள் கட்டப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு கட்டப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ இருமடங்கு.
இருப்பினும் எதிர்பாரா விதமாக பொருளியல் மந்தமடையக்கூடும் என்பதையும் சுட்டிய ஆய்வாளர்கள் அத்தகைய சூழலில் இந்த முன்னுரைப்பு பொருந்தாமல் போகக்கூடும் என்றனர்.

