ஜோசஃப் ஸ்கூலிங், அமாண்டா லிம் உள்ளிட்ட 500 பேர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்வு

ஜோசஃப் ஸ்கூலிங், அமாண்டா லிம் உள்ளிட்ட 500 பேர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்வு

2 mins read
5861fd16-5279-4be8-aa67-b3abe3e8b769
-

கம்­போ­டி­யா­வில் எதிர்­வ­ரும் மே ஐந்­தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடை­பெ­ற­வி­ருக்­கும் இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து 500 விளை­யாட்­டா­ளர்­கள் கலந்­து­கொள்­வர்.

இதற்­கா­கத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருப்­போர் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூ­ருக்கு முதல் ஒலிம்­பிக் தங்­கப் பதக்­கத்­தைப் பெற்­றுத்­தந்த ஜோசஃப் ஸ்கூ­லிங், நீச்­சல்­வீ­ரர் தியோங் சென் வெய், நீச்­சல் வீராங்­கனை அமாண்டா லிம் ஆகி­யோ­ரும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இம்­மூ­வ­ரும் சென்ற ஆண்டு கஞ்சா பயன்­ப­டுத்­தி­யதை ஒப்­புக்­கொண்ட பிறகு சர்ச்­சை­யில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

மது அருந்­தி­விட்டு வாக­ன­மோட்­டி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்ட சிலாட் போட்­டி­யில் முன்­னாள் உல­கச் சாத­னை­யா­ளர் ஷேக் ஃபெர்தவுஸ் ஷேக் அலா­வு­தீ­னும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தக் குற்­றச்­சாட்டு பற்றி அறிந்­தி­ருப்­ப­தாக ஸ்போர்ட் சிங்­கப்­பூர் அமைப்பு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் நேற்று கூறி­யது.

சிங்­கப்­பூ­ரின் விளை­யாட்­டுத் தூதர் என்ற நிலை­யில் ஃபெர்தவுஸ், போட்டி நடை­பெறும் இடத்­தில் மட்­டு­மன்றி அதற்கு அப்­பா­லும் ஆக உயர்ந்த நன்­ன­டத்­தை­யைக் கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைப்­பின் பேச்­சா­ளர் கூறி­னார்.

இந்த விவ­கா­ரத்­தைக் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் நீதி­மன்­றத் தீர்ப்பு வெளி­யான பிறகு அவர்­மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களை கம்­போ­டியா ஏற்று நடத்­து­வது இதுவே முதல்­முறை.

இதில் 38 விளை­யாட்­டு­கள் தொடர்­பான 608 போட்­டி­கள் இடம்­பெ­றும்.

'ஜெட் ஸ்கி', 'ஆப்ஸ்­ட­கல் ரேஸ்' உள்­ளிட்ட சில புதிய விளை­யாட்­டு­கள் இவ்­வாண்­டுப் போட்­டி­களில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள வேளை­யில், குறி­சு­டு­தல், பட­கோட்­டம், அம்­பெய்­தல் போன்ற விளை­யாட்­டு­கள் அகற்­றப்­பட்­டுள்­ளன.

வழக்­க­மாக ஒலிம்­பிக் போட்­டி­களில் இடம்­பெ­றும் இப்­போட்­டி­களில் ஏற்­கெ­னவே சிங்­கப்­பூர் தங்­கப் பதக்­கங்­க­ளைப் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

சென்­ற­முறை தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் விடு­பட்ட நீர்ப் பந்து விளையாட்டு இம்­முறை மீண்­டும் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

முன்­ன­தாக 2019ஆம் ஆண்டு போட்­டி­களில் சிங்­கப்­பூர் இவ்­விளை­யாட்­டில் வாகை சூடி­யது.

இதற்கு முன்­னர் வியட்­னா­மில் நடந்த தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரின் 424 விளை­யாட்­டா­ளர்­கள் 33 விளை­யாட்­டு­களில் கள­மி­றங்­கி­னர். அவர்­கள் 47 தங்­கம், 46 வெள்ளி, 71 வெண்­க­லப் பதக்­கங்­களை வென்­ற­னர்.

சிங்­கப்­பூர் 2015ஆம் ஆண்­டில் இந்­தப் போட்­டி­களை ஏற்று நடத்­தி­ய­போது சிங்­கப்­பூர் குழு 84 தங்­கப் பதக்­கங்­கள், 73 வெள்ளி, 102 வெண்­க­லப் பதக்­கங்­களை வென்­றது. தகுதிபெறாதோர் தேர்வுக்குழுவிடம் அடுத்த மாதம் வரை மேல்முறையீடு செய்யலாம்.