கம்போடியாவில் எதிர்வரும் மே ஐந்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 500 விளையாட்டாளர்கள் கலந்துகொள்வர்.
இதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்போர் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்த ஜோசஃப் ஸ்கூலிங், நீச்சல்வீரர் தியோங் சென் வெய், நீச்சல் வீராங்கனை அமாண்டா லிம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இம்மூவரும் சென்ற ஆண்டு கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட பிறகு சர்ச்சையில் சிக்கிக்கொண்டனர்.
மது அருந்திவிட்டு வாகனமோட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சிலாட் போட்டியில் முன்னாள் உலகச் சாதனையாளர் ஷேக் ஃபெர்தவுஸ் ஷேக் அலாவுதீனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பற்றி அறிந்திருப்பதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்று கூறியது.
சிங்கப்பூரின் விளையாட்டுத் தூதர் என்ற நிலையில் ஃபெர்தவுஸ், போட்டி நடைபெறும் இடத்தில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் ஆக உயர்ந்த நன்னடத்தையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகவும் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை கம்போடியா ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை.
இதில் 38 விளையாட்டுகள் தொடர்பான 608 போட்டிகள் இடம்பெறும்.
'ஜெட் ஸ்கி', 'ஆப்ஸ்டகல் ரேஸ்' உள்ளிட்ட சில புதிய விளையாட்டுகள் இவ்வாண்டுப் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள வேளையில், குறிசுடுதல், படகோட்டம், அம்பெய்தல் போன்ற விளையாட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் இப்போட்டிகளில் ஏற்கெனவே சிங்கப்பூர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்றமுறை தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் விடுபட்ட நீர்ப் பந்து விளையாட்டு இம்முறை மீண்டும் இடம்பெறவிருக்கிறது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு போட்டிகளில் சிங்கப்பூர் இவ்விளையாட்டில் வாகை சூடியது.
இதற்கு முன்னர் வியட்னாமில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் 424 விளையாட்டாளர்கள் 33 விளையாட்டுகளில் களமிறங்கினர். அவர்கள் 47 தங்கம், 46 வெள்ளி, 71 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூர் 2015ஆம் ஆண்டில் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தியபோது சிங்கப்பூர் குழு 84 தங்கப் பதக்கங்கள், 73 வெள்ளி, 102 வெண்கலப் பதக்கங்களை வென்றது. தகுதிபெறாதோர் தேர்வுக்குழுவிடம் அடுத்த மாதம் வரை மேல்முறையீடு செய்யலாம்.

