செய்திக்கொத்து

செய்திக்கொத்து

4 mins read
80aab6af-6909-48fe-ac3e-a603a202ca23
-

கணவனைக் கொல்ல முயன்ற பெண் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார்

தமது காதலருடன் சேர்ந்து கணவரைக் கொல்ல முயன்ற சவூதி அரேபிய மாது, வழக்கை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. கணவரைக் கொல்லும்படி காதலரைத் தூண்டிவிட்ட ஃபடாக் சஹர் ஒசாமா, தனது காதலர் கணவரை 30 முறைக்கு மேல் கத்தியால் குத்தியதை வேடிக்கை பார்த்தார். கணவரின் காப்புறுதிப் பணத்தைப் பெறுவதே அவரது நோக்கம் என்று கூறப்பட்டது.

சவூதி அரேபியா செல்லத் திட்டமிட்ட அவர், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மாது மாவட்ட நீதிமன்றத்தில் டிசம்பர் 21ஆம் தேதி முன்னிறுத்தப்பட்டார். ஃபடாக்கை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சட்ட அமைச்சர் ஆணை பிறப்பிக்கும்வரை அவரைத் தடுப்புக்காவலில் வைக்கும்படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதாக நேற்று கூறப்பட்டது.

ஓசிபிசி வங்கி மோசடி: 20 வயது இளையருக்கு சீர்திருத்தப் பயிற்சி

ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் பணமிழந்த மோசடியின் தொடர்பில் 20 வயது ஆடவர் ஒருவருக்கு குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சிக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டு பயிற்சி பெறுவார். அங்கு அணிவகுப்புப் பயிற்சி, ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அவர் சென்றாக வேண்டும். ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து சுமார் 12.8 மில்லியன் வெள்ளி பணம் களவாடப்பட்ட மோசடியின் தொடர்பில் 2022 பிப்ரவரியில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு இளையர்களில் அவரும் ஒருவர்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதில் பங்குபெற்றது உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை அந்த 20 வயது இளையர் கடந்த டிசம்பரில் ஒப்புக்கொண்டார். உரிமமின்றி கார் ஓட்டிய ஒரு குற்றச்சாட்டும் இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

சில குற்றங்களை 18 வயதுக்குக் கீழ் இருந்தபோது புரிந்ததால் அவரது பெயரை வெளியிட அனுமதியில்லை.

மோசடி செய்து $631 மி. இழப்பை ஏற்படுத்தியவருக்கு 20 ஆண்டு சிறை

பண்ட முதலீட்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி வகித்து, உலகம் முழுவதும் 16 நிதி நிறுவனங்களை ஏமாற்றி, 469 மில்லியன் அமெரிக்க டாலர் (S$631 மில்லியன்) இழப்பை ஏற்படுத்திய நபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் ஏற்பட்ட இழப்பு, 2021ல் சிங்கப்பூரில் மோசடி செய்யப்ட்டோர் இழந்த $633.3 மில்லியன் தொகையைவிட சற்றுதான் குறைவு என்று அரசாங்க வழக்கறிஞர்கள் முன்னர் கூறியிருந்தனர்.

'அக்ரிடிரேட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய லூலூ லிம் பெங் கிம், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முன்னணி வங்கிகளை ஏமாற்றி பல மில்லியன் வெள்ளி வர்த்தகக் கடன் பெற்றார்.

லிம், 63, அக்குற்றங்களைத் திட்டமிடவில்லை என்றும் தான் பயன்பெற அவற்றைச் செய்யவும் இல்லை என்ற தற்காப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை, மாவட்ட நீதிபதி காவ் கெங் சியோங் தண்டனை விதிக்கும் முன் சுட்டினார். 2022 டிசம்பரில் லிம், அந்த வழக்கின் தொடர்பில் 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் 24 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நொடித்துப் போகும் நிறுவனங்கள் பற்றி கவலை வேண்டாம்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நொடித்துப் போய் மூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய இரண்டு ஆண்டுகளைவிட சற்று கூடியபோதும், பொதுமக்கள் அதனால் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. சிஐஎம்பி வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் சோங் செங் வூன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் இதைத் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு 205 நிறுவனங்கள் நொடித்துப் போன உத்தரவின் பேரில் மூடப்பட்டதாக சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 191. 2020ல் 201 நிறுவனங்கள் நொடித்துப் போய் மூடப்பட்டன. நொடித்துப் போன நிறுவனங்களின் எண்ணிக்கையைவிட, அத்தகைய நிறுவனங்களின் விகிதத்தை புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையையுடன் ஒப்பிடுவதே முக்கியம் என்று திரு சோங் கூறினார். கடந்தகாலத்தில் இருந்த அளவுக்கு நொடித்துப் போகுதல் தகாத ஒன்றாக இன்று கருதப்படுவதில்லை என்றார் அவர். அதிகமானவர்கள் இந்நாளில் துணிந்து முயற்சி செய்ய விரும்புகிறார்கள். அதனால் அதிகமான வர்த்தகங்கள் தொடங்கப்பட்டு சில தோல்வி அடைவதாக திரு சோங் விளக்கினார்.

ஏஆர்டி கருவிகளைக் களவாடி விற்றவருக்கு இரண்டு வாரம் சிறை

லிட்டில் இந்தியாவில் உள்ள கொவிட்-19 பரிசோதனை நிலையத்தின் மேலாளர் ஒருவரும் கிருமி மாதிரி எடுக்கும் உதவியாளரும், தாங்கள் பணியாற்றிய நிலையத்திலிருந்து $14,162.50 மதிப்புள்ள ஏஆர்டி விரைவுப் பரிசோதனைக் கருவிகளைக் கையாண்டனர்.

அவற்றில் சிலவற்றை லாபத்துக்காக கெரோசெல் இணையச் சந்தையில் விற்றனர். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இது நடந்தது. அளவுக்கு அதிகமான கருவிகளை வாங்கியவர்கள் தங்கள் தவற்றை மறைக்கவே அவற்றைக் களவாடினர்.

குற்றத்தில் துணைபுரிந்த உதவியாளர் ஆட்ரி சாவ் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.