சிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளை மற்றும் ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவங்கள் சென்ற 2022ஆம் ஆண்டில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கூடியுள்ளன. அக்குற்றங்களில் பெரும்பாலானவற்றில், பெரிய வணிகக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள் சம்மந்தப்பட்டிருந்தன.
உலகில் அதிகக் கப்பல் போக்குவரத்து மிகுந்த கப்பல் பாதைகளில் ஒன்றான சிங்கப்பூர் நீரிணையில் 2022ல் 55 கடற்கொள்ளை, ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒப்புநோக்க, 2020ஆம் ஆண்டில் 34 கொள்ளைச் சம்பவங்களும் 2021ஆம் ஆண்டில் 49 சம்பவங்களும் நடந்தன.
41 சம்பவங்களில் பெரிய கப்பல்களிலும் மீதமுள்ள 14 சம்பவங்கள் சிறிய இழுவைப் படகுகள், சிறு விநியோகக் கப்பல்கள் ஆகியவற்றிலும் நிகழ்ந்தன.
பெரும்பாலான சம்பவங்களில் சிறிய திருட்டுகள் நிகழ்ந்தன. மேலும், 55 சம்பவங்களில் 53ல், கப்பல் ஊழியர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.
'ரீக்காப்' எனப்படும் ஆசியாவில் கப்பல்களில் நடக்கும் கடற்கொள்ளைச் சம்பவங்களுக்கு எதிரான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டு அமைப்பு நேற்று அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
ரீக்காப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணசுவாமி நடராஜன், கொள்ளைச் சம்பவங்கள் கூடியதில் 2022ன் பொருளியல், சமூகச் சூழலில் தாக்கம் இருந்ததாகச் சொன்னார்.
"சிங்கப்பூர் நீரிணையில் தினமும் சராசரியாக 1,000 கப்பல்கள் செல்கின்றன. சூழல் சாதகமாக உள்ளதுடன், குறி வைக்க வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில், வேகமாகப் பணம் செய்ய நினைக்கும் குற்றவாளிகள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தாக்குவர்," என்று அவர் கூறினார்.

