தமது உறவுக்காரப் பெண்ணிடமிருந்து பிரிந்து வாழ்ந்த அவரது கணவருடன் சேர்ந்துகொண்டு, அப்பெண்ணின் ஆண் நண்பரை பொது இடத்தில் தாக்கிய ஆடவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் $5,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க வழக்கறிஞர்கள் அந்தத் தாக்குதலை கொடூரமாகவும் எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வருணித்திருந்தனர்.
தாக்குதலில் பங்குபெற்ற குற்ற வாளி, அவரது தந்தை, அந்த 37 வயது பெண்ணிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கணவரும் சேர்ந்து, அப்பெண்ணையும் அவரது நண்பரையும் தாக்கினர்.
அச்சம்பவத்தில் அந்த 37 வயது பெண்ணின் நண்பர் தாக்கப்பட்டார். அவரது ஆடைகள் கழற்றப்பட்டு, அவரது அந்தரங்க உறுப்புகள் காணொளி எடுக்கப்பட்டன. அதில் ஒரு காணொளி, அந்த நண்பருக்குத் தெரிந்த 500க்கும் அதிகமானவர்களுக்கு அனுப்பப்பட்டது.
தாக்கப்பட்ட 37 வயது ஆடவரின் முகத்திலும் வலது பக்கக் கழுத்தெலும்பிலும் எலும்புகள் முறிந்தன. அவருக்கு 21 நாள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க, இந்த வழக்கில் யாருடைய பெயரையும் வெளியிட அனுமதி இல்லை.
நேற்று தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது குற்றவாளி, வேண்டும் என்றே கடும் காயம் விளைவித்தது, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டது, கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது வேலையிடத்தில் ஒன்பது பேருடன் சேர்ந்து போக்கர் சீட்டு விளையாடியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார்.
குற்றவாளியின் தந்தைக்கு எதிரான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
அத்தாக்குதலின்போது கூட இருந்து படம்பிடித்தவர் குற்றவாளியின் காதலி. அவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று, ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
சில நாள் கழித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவருக்கு மூன்றாண்டு சிறை, நான்கு பிரம்படிகள், $1,500 அபராதம் விதிக்கப்பட்டன.

