சிங்கப்பூரின் இரண்டு எம்ஆர்டி தடங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
35 ஆண்டுகால வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு எம்ஆர்டி தடங்கள் சிங்கப்பூரின் ஆகப்பழமையானவை. மேலும், சிங்கப்பூரின் முதல் எம்ஆர்டி தடங்கள் அவை. இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் 2012ஆம் ஆண்டு தொடங்கியதாக போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறினார்.
குறுக்குத் தீவு எம்ஆர்டி தடத்தின் நில அகழ்வு நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட அவர், மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆக அண்மைய தகவல்களை வெளியிட்டார்.
இரண்டு எம்ஆர்டி தடங்களிலும் ஆறு அடிப்படை வட்டாரங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியதில் மூன்று வட்டாரங்களில் பணிகள் முடிந்து
விட்டதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
ஒரு ரயிலுக்கு நெருக்கமாக மற்றொரு ரயில் செல்வதை அனுமதிக்கும் சமிக்ஞை முறை, தண்டவாளங்களைத் தாங்கிப்
பிடிக்கும் பலகைகள், ரயில்
களுக்குத் தண்டவாளம் மூலம் மின்சக்தி அளிக்கும் மூன்றாம் ரயில் முறை ஆகியன தொடர்பான பணிகள் நிறைவுற்றன.
தண்டவாள மின்சுற்றிலும் ரயில்களிலும் உள்ள மின்சார முறை தொடர்பான பணிகள் இன்னும் நீடிப்பதாக திரு ஈஸ்வரன் கூறினார்.
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் உள்ள 27 எம்ஆர்டி நிலையங்களுக்கும் கிழக்கு-மேற்குப் பாதையில் உள்ள 35 எம்ஆர்டி நிலையங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கும் முறையில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 1,050 கிலோமீட்டர் தூரத்திற்கான கம்பிவடங்களையும் சாதனங்களையும் மாற்றும் பணிகளும் இதில் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
தண்டவாள மின்சுற்று என்பது சமிக்ஞை முறையின் ஒரு பகுதி. வேகம், இருப்பிடம் போன்றவற்றைக் கண்காணிக்கவும் கட்டமைப்பில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணவும் செயலாக்கக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அளிக்கப்படும் சமிக்ஞையைச் சார்ந்து இது உள்ளது. இந்தப் புதிய முறையின்கீழ், கோளாறுகளை அவை ஏற்படும் முன்னரே அடையாளம் காணமுடியும்.
இரண்டு ரயில் பாதைகளிலும் பழைய ரயில்களுக்கு மாற்றாக 2018ஆம் ஆண்டு வாங்க ஏற்பாடு செய்யப்பட்ட 106 புதிய ரயில்களில் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள எம்ஆர்டி பாதைகளில் கிழக்கு-மேற்கு ஆக நீளமானது. இதன் தூரம் 57 கிலோமீட்டர். நிலத்தடி, நிலத்தின் மேற்பரப்பு என இருவகை எம்ஆர்டி நிலையங்களைக் கொண்டது இந்த ரயில் பாதை.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள எம்ஆர்டி கட்டமைப்பில் ஆறு எம்ஆர்டி பாதைகள் இயங்குகின்றன. இவற்றில் 140க்கும் மேற்பட்ட எம்ஆர்டி நிலையங்கள் உள்ளன.

