சிராங்கூன் சென்ட்ரல் டிரைவ், புளோக் 257ன் வெற்றுத்தளத்தில் 59 வயது ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு இருநாள்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த துப்புரவாளர் ஒருவர் அந்த ஆடவரின் உடலைக் கண்டார்.
கடைசியாக அந்த ஆடவரைக் கடந்த 14ஆம் தேதி தாம் கண்டதாக அந்தத் துப்புரவாளர் கூறினார் என்று ஷின்மின் நாளிதழ் செய்தி தெரிவித்தது.
அந்த வீவக புளோக்கிற்கும் கார்நிறுத்தப் பூங்காவிற்கும் இடைப்பட்ட வெற்றுத்தளத்தில் அவர் இரவு நேரத்தைக் கழிப்பதைத் அத்துப்புரவாளர் அடிக்கடி கண்டுள்ளார்.
அவ்வகையில், கடந்த 14ஆம் தேதி அவர் பார்த்த அந்த ஆடரவ் அயர்ந்து தூங்குவதுபோல் தெரிந்ததால் அவரைத் தொந்தரவு செய்ய துப்புரவாளர் விரும்பவில்லை.
மறுநாள் 15ஆம் தேதி பணிவிடுப்பு என்பதால் 16ஆம் தேதி காலை 6 மணியளவில் வேலைக்குத் திரும்பினார் அந்தத் துப்புரவாளர். அப்போது, அந்த ஆடவர் இருந்த இடத்தைக் கடந்தபோது துர்நாற்றம் வீசியதை அவர் உணர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, அருகே சென்று பார்த்தபோது அவர் இறந்துவிட்டதை துப்புரவாளர் உணர்ந்தார். அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக அதுபற்றி தன் முதலாளிக்குத் தகவல் தெரிவித்தார். அந்த முதலாளி பின்னர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
ஆடவரின் மரணத்தை இயற்கைக்கு மாறான ஒன்றாக காவல்துறை விசாரித்து வருகிறது.

