செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fbf62f59-90f9-4bb6-8c4a-f8145954db4d
-

பிப்ரவரி 6ல் நாடாளுமன்றக் கூட்டம்

பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.

மகப்பேற்று விடுப்பிலிருந்தபோது சேயுடன் மாண்ட தாய்

தொடக்கப்பள்ளி ஆசிரியரான திருவாட்டி லின் சியுவெ, 41, இரண்டாவது மகள் அகானாவை ஈன்ற பிறகு மகப்பேற்று விடுப்பிலிருந்தார். விடுப்பு முடிந்து பணியில் மீண்டும் சேருவதற்கு முன்னர் கணவர் கார்த்திக் பாலசுப்பிரமணியம், 43, மூன்று வயதாகும் மூத்த மகள் ஆன்யா ஆகியோருடன் ஜப்பானின் ஹொக்காய்டோ வட்டாரத்தில் உள்ள பனிச்சறுக்கு விளையாடும் இடத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் இம்மாதம் 10ஆம் தேதி இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் திருவாட்டி லின்னும் நான்கு மாத இளைய மகள் அகானாவும் உயிரிழந்தனர். சீனப் புத்தாண்டுக்கு சிங்கப்பூர் திரும்புவது இக்குடும்பத்தினரின் திட்டம் என்று திருவாட்டி லின்னின் சகோதரர் கூறினார்.

குழந்தைகளுக்கான பால் மாவு திருட்டைத் தடுக்க சோதனை முயற்சி

புக்கிட் பாத்தோக் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி, குழந்தைகளுக்கான பால் மாவு இருக்கும் அலமாரியைப் பூட்டி வைத்துள்ளது. பால் மாவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பேரங்காடி ஊழியரை அணுகும்படி கேட்டுக்கொள்ளும் குறிப்பு அலமாரியில் ஒட்டப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்நடவடிக்கை, திருட்டைத் தடுக்கும் சோதனை முயற்சி என்று பேரங்காடி கூறியது. இதைத் தவிர்த்து, அலமாரிக்கருகில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சீருடை அணியாத பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் பேரங்காடி குறிப்பிட்டது.