இரவுச் சந்தைகள், 'ஹங்ரி கோஸ்ட்' விழா நடவடிக்கைகள் போன்ற சமூகம் அல்லது சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்த விரும்புவோர், மார்ச் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் நில ஆணையத்திடம் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இதனை நிர்வகித்து வருகிறது.
மேம்பட்ட நிர்வாகம், செயலாக்கத் திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இம்மாற்றம் அமலுக்கு வருவதாக ஆணையமும் கழகமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிடுகிறது.
பொது வீடமைப்புப் பேட்டைகளுக்கு அப்பால் உள்ள காலியிடங்கள், பாலங்களுக்கு அடியில் உள்ள இடங்கள் போன்றவற்றை, சிங்கப்பூர் நில ஆணையம் தற்போது நிர்வகித்து வருகிறது. எடுத்துக்காட்டாக ஹாவ் பார் வில்லா ரயில் நிலையம், டோவர் ரோடு போன்றவற்றுக்கு அருகில் அமைந்திருக்கும் காலியிடங்களைக் கூறலாம்.
மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு, பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காலியிடங்களைப் பயன்படுத்திக்கொள்ள தற்காலிக உரிமங்களை ஆணையம் வழங்கும்.
சமூக, சமய நிகழ்ச்சிகள் மட்டுமன்றி சமூகத் தோட்டம் அமைப்பதற்கும் இது பொருந்தும். தற்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஏறக்குறைய 1,408 ஹெக்டர் பரப்பளவிலான காலியிடங்களையும் அவற்றின் தொடர்பிலான கிட்டத்தட்ட 600 தற்காலிக உரிமங்களையும் நிர்வகிப்பதாகக் கூறப்பட்டது.
தற்காலிக உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் இல்லை. நிர்வாக மாற்றம் சுமுகமாகவும் இடையூறு இன்றியும் இடம்பெறும் என்று ஆணையமும் கழகமும் உறுதிகூறின.
மார்ச் 1ஆம் தேதி வரை தற்காலிக உரிமம் தொடர்பான உதவிகளுக்கு, தொடர்ந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை நாடலாம். இதன் தொடர்பில் 6490 3177 என்ற தொலைபேசி எண்ணிலோ www.hdb.gov.sg/efeedback எனும் இணையத்தளம் மூலமாகவோ வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை அணுகலாம்.
மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசாங்கத்துக்குச் சொந்தமான காலியிடத்தைப் பயன்படுத்த விரும்புவோர் https://app1.sla.gov.sg/tol எனும் இணைய முகவரியில் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட நிலப் பகுதிக்கு விண்ணப்பிக்க இயலுமா என்பதை www.onemap.gov.sg எனும் இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
நகராட்சி நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் கருத்துரைக்க, தொடர்ந்து ஒன்சர்விஸ் செயலியைப் பயன்படுத்தலாம்.

