இந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி சிறப்பாக இருக்காது எனக் கருதப்படும் நிலையில் 'மெட்டாவெர்ஸ்', நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றில் முதலீடு செய்வதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் நிறுவனங்கள் கருதுவது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. மெட்டாவெர்ஸ் தளமானது இவ்வுலகில் சாத்தியப்படாத வகையிலான அனுபவங்களை மக்கள் முப்பரிமாண வெளியில் பெறுவதற்கு உதவுகிறது.
கருத்தாய்வில் கலந்துகொண்ட 66 விழுக்காட்டு நிதி நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான விவகாரங்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதாகக் கூறியுள்ளன. இவை தொடர்பான புதிய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதாக 59 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் 'எஃப்ஐஎஸ்' எனும் நிதித் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட ஒன்பது பகுதிகளைச் சேர்ந்த 2,000 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்தாய்வில், இணையத்தின் அடுத்த கட்டமாகக் கருதப்படும் மெட்டாவெர்சில் வாய்ப்புகளை எதிர்பார்ப்பதாக 53 விழுக்காட்டு நிதி நிறுவனங்கள் கூறியுள்ளன.
நிதி அல்லாத சேவை வழங்கும் 40 விழுக்காட்டு நிறுவனங்கள் இவ்வாண்டில் மெட்டாவெர்சில் தடம் பதிப்பது முக்கியம் என்று கருத்துரைத்துள்ளன.
'டீஃபை' எனப்படும் 'டீ சென்ட்ரலைஸ்டு ஃபைனான்ஸ்' எனப்படும் புதிய நிதித் தொழில் நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி வாய்ப்பாக விளங்கும் என்று 56 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ள வேளையில், மின்னிலக்க நாணயம் தொடர்பான கட்டுப்பாடுகள் தெளிவாக இல்லை என்பதே அதைப் பயன்படுத்துவதற்கு முக்கியத் தடையாக இருப்பதாக 33 விழுக்காட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.
கருத்தாய்வு, சென்ற ஆண்டு ஜூலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் நிறுவனங்களைச் சேர்ந்த 160 நிர்வாகிகள் இந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர். இவர்களில் 70 பேர் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள். மற்ற 90 பேரும் சில்லறை விற்பனை, போக்குவரத்து, உணவு-பானத்துறை போன்றவற்றைச் சேர்ந்தவர்கள்.

