வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய வட்டமேசை விவாதம் 2023ல் கருத்து
சீனா எல்லைகளை மீண்டும் திறக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் விரிசல் அதிகரிக்கிறது. இந்தச் சூழலில் இங்குள்ள நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். என்றாலும் அதிக செலவு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகும் முயற்சிகளை இரு மடங்காக்கி அதன்மூலம் புதிய சவால்களைச் சமாளிக்கலாம்.
நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திகழ வேண்டும். தங்களுடைய ஆற்றல் வளத்தை விரிவுபடுத்த வேண்டும். நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் அரசாங்கம் மேலும் உதவிக்கரம் நீட்ட முடியும்.
சிங்கப்பூர் கணக்குத் தணிக்கையாளர்கள் பயிலகம் ஏற்பாட்டில் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்திய வட்டமேசை விவாதிப்பு நேற்று நடந்தது.
அதில் தொழில்துறை வல்லுநர்கள் எழுப்பிய கருத்துகளில் இவை சில.
அந்த விவாதிப்புக் கூட்டத்திற்கு பயிலகத்தின் மன்ற உறுப்பினரும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டோன் வீயும் புக்கிட் பாஞ்சாங் உறுப்பினரான லியாங் எங் ஹுவாவும் கூட்டாக தலைமை வகித்தனர். திரு லியாங் நிதி, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
உலக சூழ்நிலை சிக்கல்மிக்கதாக ஆகி வருகிறது. நிலையில்லாமல் இருந்து வருகிறது. உலகப் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையை சிங்கப்பூர் சமாளித்து முன்னேற வேண்டி இருக்கிறது என்று திரு லியாங் கூறினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் போட்டாபோட்டி உள்ளிட்ட புவிசார் அரசியல் பிளவுகளை சிங்கப்பூர் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
தொழில்நுட்பம் காரணமாக ஏற்படக்கூடிய தற்காலிக இடையூறுகளையும் அது சமாளிக்க வேண்டி இருக்கும்.
அதேவேளையில், உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளையும் அது நிறைவேற்ற வேண்டும் என்று திரு லியாங் தெரிவித்தார்.
அந்த விவாதிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யுஓபி வங்கியின் ஆய்வுத் துறைத் தலைவர் சுவான் டெக் கின், சீனா எல்லைகளை மீண்டும் திறந்து இருப்பதால் சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை சூடுபிடிக்கும் என்று கூறினார்.
இந்த வட்டாரமும் அதனால் சுறுசுறுப்பு அடையும். அதேவேளையில், அதன் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். அதனால் செலவுகள் கூடும் என்றும் திரு சுவான் தெரிவித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் போட்டி போக்கு காரணமாக இங்குள்ள நிறுவனங்களுக்கு வாய்ப்புகளும் உருவாகும்.
அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்களுடைய பொருள், சேவை வழங்கீட்டுக் கட்டமைப்புகளை இடையூறுகள் குறைவாக இருக்கின்ற நாடுகளுக்கு இடம் மாற்றிக்கொள்ளலாம்.
இருந்தாலும்கூட அதனால் ஆற்றல் குறைந்த பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு உருவாகக்கூடிய நிலையும் ஏற்படும் என்றாரவர்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத் தலைவர் கெர்ட் வீ, உலக நிலவரங்கள் மாறும் சூழலில் நிறுவனங்கள் தங்களை எப்படி சீரமைத்துக் கொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்று தெரிவித்தார்.
இங்கு சொத்துத் துறை, தொழில்துறை வாய்ப்புகளை சீன நாட்டவர்கள் நாடுவர் என்பதால் நிறுவனங்களின் இணைப்பும் பற்றுமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் கருத்து கூறினார்.
வட்டிவிகித உயர்வு காரணமாக ஏற்படக்கூடிய தாக்கம் இந்த ஆண்டில் அதிகம் உணரப்படும் என்பதால் அதிக கடன் சுமை ஒரு சவாலாக இருக்கும் என்றும் அவர் கருத்து கூறினார்.
அந்த விவாதிப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த சிங்கப்பூர், சீன வர்த்தக தொழில் சபை தலைமைச் செயலாளர் லிம் ஹாக் யு, அரசாங்கம் வர்த்தகச் சங்கங்களுடன் சேர்ந்து செயல்பட்டு நிறுவனங்களிடையே நிலவக்கூடிய அறிவாற்றல் இடைவெளியைப் போக்கலாம் என்றார்.
தொழில் வாய்ப்புகளைச் சுற்றுச்சூழல் துறை எவ்வாறு உருவாக்கும் என்பதை இதன் மூலம் நிறுவனங்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
நிறுவனங்களின் மின்னிலக்க ஆற்றலில் நம்பிக்கையைப் பலப்படுத்தும் வழிகளை அரசாங்கம் ஆராய முடியும் என்று எஸ்ஜி டெக் நிறுவனத்தின் பிரமுகர் ஹோவி லாவ் கூறினார்.

