காவல்துறை தன்னைத் தவறாக கைது செய்துவிட்டது என்று கூறி வழக்கு தொடுத்த ஓர் ஆடவருக்கு $20,000 இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
மா கியாட் செங், 48, என்ற அந்த ஆடவருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இருந்தாலும் காவல்துறை காவலில் இருந்தபோது தன்னை வேறு ஓர் அதிகாரி தாக்கியதாக அந்த ஆடவர் கோரியது நிராகரிக்கப்பட்டுவிட்டது.
சன்டெக் சிட்டியில் ஓர் ஆடவர் தன்னுடைய மகனின் தலையைத் தொட்டு இருக்கிறார் என்று காவல்துறையுடன் தொடர்புகொண்டு மாது ஒருவர் 2017 ஜூலை 7ஆம் தேதி புகார் அளித்தார்.
காவல்துறை அதிகாரியான முகம்மது ரோஸ்லி முகம்மதும் அவருடைய சக அதிகாரியும் அன்று இரவு சுமார் 8 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு திரு மா, கல்லால் ஆன இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இதர இரண்டு அதிகாரிகள் உதவியுடன் திரு ரோஸ்லி திரு மாவின் கைகளுக்கு விலங்கிட்டு சட்டத்தின்படி அவரை நடத்தினார். திரு மா, மத்திய காவல்துறைப் பிரிவில் வைக்கப்பட்டார். அவரை டாக்டர் லிம் ஹான்ஜி என்பவர் பரிசோதித்து திரு மாவை மனநல நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பினார்.
அந்த நிலையத்திற்கு 2017 ஜூலை 8ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குச் சென்றதற்கு முன்னதாக திரு மா வேறோர் அறைக்கு மாற்றப்பட்டார்.
அதே நாளன்று இரவு சுமார் 7 மணிக்கு அந்தப் பயிலகத்தில் இருந்து திரு மா விடுவிக்கப்பட்டார். திரு மா, 2020ல் சிங்கப்பூர் காவல் துறையையும் இரண்டு அதிகாரிகளையும் பிரதிநிதிக்கும் வகையில் தலைமைச் சட்ட அதிகாரி மீது வழக்குத் தொடுத்தார்.
தீர்ப்பளித்த நீதிபதி ஃபிலிப் ஜெயரத்னம், திரு மாவுக்கு $20,000 இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டார்.
திரு மா, நேரடியாக மனநல நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக கைவிலங்கிடப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டதை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

