பணம் சட்டவிரோதமாகப் புழங்கு வதைத் தடுக்கவும் இதர நிதித்துறை குற்றச்செயல்களைத் தவிர்க்கவும் மின்னிலக்க நாணயத்தை ஒழுங்குப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று டாவோஸ் உலகப் பொருளியல் கருத்தரங்கம் அமைப்பில் ஒரு குழுவினர் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முரத்னம் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
மின்னிலக்க நாணய ஏற்பாட்டு முறையை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவான ஒன்று என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.
இருந்தாலும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றை நிதித்துறை நிலைப்பாட்டு காரணங்களுக்காக ஒழுங்குபடுத்திய அதே வழியில் மின்னிலக்க நாணயத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வரும்போது அடிப்படை தத்துவ ரீதியான கேள்வி ஒன்று தவிர்க்க இயலாததாக இருக்கிறது என்று திரு தர்மன் தெரிவித்தார்.
முற்றிலும் ஊக அடிப்படையில் இருக்கும் ஒன்றைச் சட்டமாக்கலாமா என்ற ஒரு கேள்வி எழுகிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவரும் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் கூறினார்.
அல்லது ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாத அந்தச் சந்தை எப்படி இருக்கும்? அதில் ஈடுபடுவது உங்கள் சொந்த பொறுப்பு என்பதை நூற்றுக்கு நூறு தெள்ளத்தெளிவாக மக்களுக்கு விளக்குவது சிறந்ததாக இருக்குமா? என்று வினவிய திரு தர்மன், தமது சிந்தனை இரண்டாவது கருத்தை ஒட்டி இருப்பதாகக் கூறினார்.
பயனீட்டாளர்களுக்கான போதனை இடம்பெறவேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கூறினார்.
மின்னிலக்க நாணயத்தில் மேம்போக்காக ஈடுபட்டால் அது முட்டாள்தனமாகவே இருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அந்த விவாதிப்பில் கலந்துகொண்டு பேசிய பிரான்ஸ் வங்கி ஆளுநர் பிரான்சுவா வில்லோராய் டி காலாவ், மின்னிலக்க நாணய நிறுவனங்களில் இருந்து தொடங்கி வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த நாடுகள் உடனடியாக முயலவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

