மோசடிக்கு எதிராக செயல்படுக

மோசடிக்கு எதிராக செயல்படுக

2 mins read
32e0c7c5-8775-479a-9815-267dbf54b0a1
தேசிய குற்றவியல் தடுப்பு மன்றத்தின் 'ஐ கேன் ஆக்ட் அகைன்ஸ்ட் ஸ்கேம்ஸ்' எனும் இந்த ஆண்டின் இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசினார் அமைச்சர் சுன் ஷுவெலிங். -

மோசடிகளுக்கு எதிராக சிங்கப்பூர் மக்கள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கேட்டுக் கொண்டுள்ளார். எவரும் மோசடிக்கு இரையாகலாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

"மோசடிகள் உலகம் எங்கும் உள்ள அனைத்து சட்ட, அமலாக்க நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக உள்ளன.

"எனவே, சட்ட நடைமுறைகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. மோசடிகளுக்கு எதிரான சிறந்த தற்காப்பு, விழிப்புடன், கவனத்துடன், விவேகத்துடன் இருப்பது. அதில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு, மோசடிகளில் இருந்து மற்றவர்களையும் பாதுகாப்பது," என்றார் அமைச்சர்.

மோசடிக் குற்ற எதிர்ப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த 'ஸ்கேமினார்' கருத்தரங்கில் அவர் பேசினார்.

அமைச்சுகளுக்கு இடையிலான மோசடித் தடுப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அவர், நேரடியாக நடைபெறும் குற்றங்கள் குறைவாக இருக்கும் நிலையில், இணைய மோசடிகள் தான் தற்போதைய தலையாய பிரச்சினை என்றார்.

உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் காவல்துறை, தேசிய குற்றவியல் தடுப்பு மன்றம் ஆகியன 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளுடன் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் 700க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் 200க்கும் மேற்பட்டோர் இணையம் வாயிலாகவும் பங்கேற்றனர்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான அவர், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற 60,000 இணைய மோசடிச் சம்பவங்களில் ஒரு பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை சிங்கப்பூர் மக்கள் இழந்துள்ளதாகவும் அமைச்சர் சுன் ஷுவெலிங் குறிப்பிட்டார்.

உலகளவில் நிலவும் சிரமமான பொருளியல் சூழ்நிலையில், மோசடிகள் அதிகரிக்கலாம். வேலை மோசடிகள் கவலைக்குரியன என்றார் அவர்.